குண்டு வெடிக்கப்போவதாக முதல் நாளே எச்சரித்த தமிழக உளவுத்துறை... அலட்சியம் காட்டிய இலங்கை..!

By vinoth kumar  |  First Published Apr 23, 2019, 10:29 AM IST

இலங்கையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே தமிழக உளவுத்துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 


இலங்கையில் நேற்று முன்தினம் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே தமிழக உளவுத்துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

இலங்கை தலைநகர் கொழும்புவில் 3 தேவாலயங்கள், 4 நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 9 இடங்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இந்த பயங்கர தாக்குதலில், ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 310-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

Latest Videos

இந்நிலையில் உலகையே உலுக்கிய இந்த நாசவேலையை நடத்தியவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினரும் போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசர நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று கூடியது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் முப்படை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், நள்ளிரவு 12 மணி முதல் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முப்படைகளுக்கும், போலீசாருக்கும் கூடுதல் அதிகாரம் வழங்கும் விதமாக, தீவிரவாத தடைச்சட்டத்துடன் சம்மந்தப்பட்ட சட்ட விதிமுறைகளுக்கான அவசர நிலையை பிரகடனப்படுவதாக அதிபர் சிறிசேனா கூறினார். இதன்படி அவசரநிலை பிரகடனம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், இலங்கை குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன்னதாகவே இந்திய உளவுத்துறை இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், தற்போது ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று முக்கிய இடங்கள், வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக கடந்த 20-ம் தேதியே தமிழக உளவுத்துறை எச்சரித்த தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தமிழக உளவுத்துறை ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளனர். அதில் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று முக்கிய இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் வெடிகுண்டு நடத்த சதி நடைபெறுவதாக தமிழக உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளனர். எனவே தமிழக உளவுத்துறை கொடுத்த அறிக்கையை தொடர்ந்து மறுநாள் காலையில் தான் இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. எப்போதும் இந்திய உளவுத்துறை தான் அருகில் உள்ள நாடுகளுக்கு இதுபோல எச்சரிக்கை கொடுப்பது வழக்கம். ஆனால் முன்கூட்டியே ஏதோ ஒரு தகவலின் அடிப்படையில் இலங்கையில் தாக்குதல் நடத்தப்போவது தமிழக உளவுத்துறைக்கு கிடைத்துள்ளது. 

click me!