
தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியுங் தெற்கு துறைமுக நகரமான பூசானுக்கு வருகை புரிந்தபோது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். கழுத்துப் பகுதியில் கத்திக்குத்துப்பட்டு படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி காலை 10.27 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவரான லீ ஜே மியுங், புசானின் கதியோக் தீவில் புதிய விமான நிலையத்தின் கட்டுமானப் பகுதியை பார்வையிட்டபின் செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஆட்டோகிராப் கேட்பது போல் லீ ஜே மியுங்கை நெருங்கிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவரது கழுத்தின் இடது பக்கத்தில் கத்தியால் குத்தியதாக அந்நாட்டின் Yonhap செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர் சுமார் 20-30 சென்டிமீட்டர் நீளமுள்ள அடையாளம் தெரியாத ஆயுதத்தை பயன்படுத்தியதாக நேரில் கண்ட சாட்சிகளை மேற்கோள் காட்டி Yonhap செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்.. சேதங்கள் அதிகம்.. ஜப்பான் பிரதமர் சொன்ன அதிர்ச்சி தகவல்!!
தாக்குதலுக்கு உள்ளான எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியுங், கண்களை மூடிக்கொண்டு தரையில் படுத்திருப்பதையும், அவரைச் சுற்றியுள்ள மற்றவர்கள் அவரது கழுத்தின் பக்கவாட்டில் கைக்குட்டையால் அழுத்தி பிடித்திருப்பது போன்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல் நடந்த 20 நிமிடங்களில் அவர் அருகில் உள்ள பூசன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் சுயநினைவுடன் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.