பழங்களின் தோல் கூட வேஸ்ட் ஆகாது.. தண்ணீரை சுத்தம் செய்ய புதிய வழி - சிங்கப்பூர் விஞ்ஞானியின் அடுத்த சாதனை!
பழங்களின் தோல்களை பயன்படுத்தி MXenesஐ உருவாக்கி, இந்த MXenesகளை கொண்டு, சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் வெப்பத்தால், தண்ணீரை சுத்திகரிக்க புதிய வழியை அவர் கண்டுபிடித்துள்ளார். அதாவது பழங்களில் இருந்து பெறப்படும் MXenes மற்றும் சூரிய ஒளியை பயன்படுத்தி தண்ணீரை சுத்தம் செய்யும் முறை.
MXenes என்பது ஒரு புதிய பொருள் அல்ல என்றாலும், MXenes-ஐ ஒருங்கிணைக்க பழத்தோல்களை பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. இது பெரிய அளவில் வெற்றிபெற்று வணிகமயமாக்கப்பட்டால், அது சிங்கப்பூரில் உருவாகும் உணவுக் கழிவுகளின், கணிசமான பகுதியைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் பேரிடர் மண்டலங்கள் அல்லது கிராமப்புறப் பகுதிகள் போன்ற மின்சார வசதி குறைவாக இருக்கும் இடங்களுக்கு அவை பெரிய அளவில் பயனளிக்கும்.
எடிசன் ஆங் என்ற அந்த உதவிப்பேராசிரியர், ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூரின் குப்பைக் கிடங்கில் எவ்வளவு உணவுக் கழிவுகள் சென்று சேர்க்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளார். "ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூரில் சுமார் 20,000 டன் உணவுக் கழிவுகள் உருவாகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றது.
பழச்சாறு தொழில் தான் சிங்கப்பூரில் கணிசமான அளவில் உணவு கழிவுகளை வெளியிடுகிறது. இதில் பழங்களில் உள்ள 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது, மேலும் மீதமுள்ள 50 சதவீதம், பழத்தோல்களாக தூக்கி எறியப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிக்கலைச் சமாளிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற யோசனை தான் எடிசனை இந்த ஆய்வில் இறங்க தூண்டியுள்ளது.
அன்று முதல் எடிசன் இந்த கழிவுகளை நமது குப்பைக் கிடங்கிற்குள் செல்ல விடாமல் தடுத்து அதை கொண்டு ஒரு உபயோகமாக ஒன்றை ஏன் தயாரிக்கக்கூடாது என்று எண்ணியதால் தற்போது இந்த புதிய வழி கண்டறியப்பட்டுள்ளது.
தற்போதைக்கு, தேங்காய் மட்டை, ஆரஞ்சு பழ தோல் மற்றும் வாழைப்பழத்தோலை பயன்படுத்தி MXenes உருவாக்க முயற்சித்துள்ளார் எடிசன். உண்மையில், பிளாஸ்டிக், காகிதம் மற்றும் ஆடைகள் போன்ற ஜவுளிக் கழிவுகள் உள்ளிட்ட எந்தவொரு கரிமப் பொருட்களையும், சில உலோகக் கூறுகளுடன் கலந்து MXenes தயாரிக்கப் பயன்படுத்தலாம் என்றும் எடிசன் மேலும் கூறினார்.