Russia Ukraine War: விளாடிமிர் புதின் ஒரு போர் குற்றவாளி - கொதித்தெழுந்த ஜோ பைடன்!

Nandhini Subramanian   | Asianet News
Published : Mar 17, 2022, 11:38 AM IST
Russia Ukraine War: விளாடிமிர் புதின் ஒரு போர் குற்றவாளி - கொதித்தெழுந்த ஜோ பைடன்!

சுருக்கம்

Russia Ukraine War: ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் ஒரு போர் குற்றவாளி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக சாடியுள்ளார்.

தியேட்டர் ஒன்றினுள் பாதுகாப்பிற்கு தஞ்சம் புகுந்து இருந்த பொது மக்கள் மற்றும் உணவு வாங்க காத்திருந்த அப்பாவி பொது மக்கள் மீது ரஷ்யா நடத்திய கொடூர தாக்குதலில் பலர் உயிரிழந்ததாக உக்ரைன் மற்றும் அமெரிக்கா சார்பில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டன. இந்த சம்பவத்திற்கு சர்வதேச அளவில் பல நாடுகள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தன. 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் ஒரு போர் குற்றவாளி என குறிப்பிட்டுள்ளார். மேலும் விளாடிமிர் புதின் செய்து வரும் செயல்கள் முற்றிலும் மன்னிக்க முடியாதவை என அவர் மேலும் தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது முதல் இதுவரை சுமார் முப்பது லட்சத்திற்கும் அதிகமான உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி அருகாமையில் உள்ள மற்ற நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். 

உக்ரைன் நாட்டின் மௌரிபுல் நகரில் உள்ள தியேட்டர் ஒன்றின் மீது ரஷ்யா வீசிய சக்திவாயந்த வெடிகுண்டு வெடித்ததில், பலர் ஆபத்தில் சிக்கியுள்ளனர். இந்த விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர், எத்தனை பேர் காயமுற்றனர் என்ற தகவல்கள் எதுவும் தெரியவில்லை என உக்ரைன் நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. மனித உரிமைகள் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் தகவல்களின் படி இந்த தியேட்டரில் பாதுகாப்பு தேடி சுமார் 500 பேர் பதுங்கி இருந்தனர் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த தாக்குதல் நடைபெறவே இல்லை என மாஸ்கோ கடுமையாக மறுத்துள்ளது. மேலும் ரஷ்யா நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சகம், எங்களின் படைகள் கட்டிடத்தை தாக்கவில்லை என தெரிவித்து இருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வின் வடகிழக்கில் அமைந்துள்ள செர்னிஹிவ் பகுதியில் உணவுக்காக காத்திருந்த பத்து பேரை ரஷ்ய படைகள் கொன்று விட்டதாக கீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்து உள்ளது.  

நான்காவது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வரும் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குடியிருப்பு கட்டிடத்தினுள் இருந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் கடுமையான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்த தகவலை ரஷ்யா தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

முன்னதாக உக்ரைனில் நடத்தி வரும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. ரஷ்யா போர் விதிகளை மீறி, இனப்படுகொலையை அரங்கேற்றி வருவதாக உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணையை அடுத்து சர்வதேச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது. சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் தொடர்ந்து இருந்த வழக்கின் விசாரணையில் ரஷ்யா பங்கேற்கவில்லை.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜப்பானை உலுக்கிய 7.5 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!
பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!