இயற்கையின் அதிசயம்! உலகில் முதன்முதலாக உண்மையான நீல நிறப் பழம் கண்டுபிடிப்பு!

Published : Nov 26, 2025, 05:29 PM IST
First Blue Fruit without Pigment

சுருக்கம்

ஆஸ்திரேலிய மழைக்காட்டில் காணப்படும் Elaeocarpus angustifolius மரம், உண்மையான நீல நிறத்தில் பழத்தைக் கொண்டுள்ளது. இந்த நிறம் நிறமிகளால் ஏற்படவில்லை, மாறாக 'கட்டமைப்பு நிறமாற்றம்' என்ற ஒளியியல் விளைவால் ஏற்படுகிறது.

இயற்கையில் உண்மையான நீல நிறத்தில் பழங்கள் இல்லை என்று பல காலமாக விஞ்ஞானிகள் நம்பி வந்தனர். சாதாரணமாக நாம் காணும் நீல நிற உணவுகளான ப்ளூபெர்ரி (Blueberry) அல்லது நீல மக்காச்சோளம் போன்றவை கூட, உண்மையில் ஊதா அல்லது இண்டிகோ (indigo) நிறத்தின் சாயல்களே.

இந்நிலையில், ஆஸ்திரேலிய மழைக்காட்டில் வளரும் ஓர் அரிய மரம், உண்மையான நீல நிறத்தில் ஒரு பழத்தைக் கொண்டிருப்பது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நீல அத்திப்பழம்

இந்த மரம் Elaeocarpus angustifolius என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, இதை நீல குவாண்டாங் (Blue Quandong), நீல அத்திப்பழம் அல்லது நீலச் சலவைக்கல் மரம் (Blue Marble Tree) என்றும் குறிப்பிடுகின்றனர்.

இது ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா மற்றும் இந்தோனேசியாவின் சில பகுதிகளில் வளர்கிறது.

இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பழம், இயற்கையாகவே கண்ணைப் பறிக்கும் பிரகாசமான, உலோகத்தன்மை கொண்ட (Metallic) நீல நிறத்தில் காட்சியளிக்கிறது.

எவ்வித நிறமியும் இல்லை

விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம், இந்த நீலப் பழத்தின் தீவிரமான நிறம் இயற்கையானது என்றும், இது எவ்வித நிறமிகளைப் (Pigments) பயன்படுத்தியும் வரவில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மாறாக, இதன் நிறம் கட்டமைப்பு நிறமாற்றம் (Structural Colouration) என்ற ஒளியியல் விளைவினால் ஏற்படுகிறது. இது மயில் இறகுகள் அல்லது பட்டாம்பூச்சி இறக்கைகளில் காணப்படும் நிறங்களைப் போலவே, ஒளியைப் பிரதிபலிக்கும் ஒரு விசித்திரமான செயல்பாடு ஆகும்.

நீல ஒளியின் மாயை

நேச்சர் (Nature) மற்றும் பி.என்.ஏ.எஸ் (PNAS) போன்ற அறிவியல் இதழ்களில் வெளியான ஆய்வுகளின்படி, இந்தப் பழத்தின் தோலில் செல்லுலோஸின் (Cellulose) மிக மெல்லிய அடுக்குகள், நானோஸ்கேல் (Nanoscale) வடிவங்களில் அமைந்திருக்கின்றன.

இந்த அடுக்குகள்தான் நீல நிற அலைநீளங்களை மட்டுமே பிரதிபலிக்கின்றன, மற்ற அனைத்து அலைநீளங்களையும் ரத்து செய்கின்றன. விஞ்ஞானிகள் இந்த பழத்தில் இருந்து நீல நிறமியைப் பிரித்தெடுக்க முயன்றபோது, அந்தப் பொருள் சாம்பல் நிறமாக மாறியது. இதன் மூலம், இதன் நிறம் வேதியியல் ரீதியானது அல்ல என நிரூபணமானது.

பறவைகளைக் கவரும் தந்திரம்

நீல நிறத்தைப் பயன்படுத்தும் உலகின் ஆறு பழங்களில் இதுவும் ஒன்றாகும். நீல நிறத்தையும், புற ஊதாக் கதிர்களையும் (UV light) மிகத் தெளிவாகப் பார்க்கக்கூடிய பறவைகளைக் கவர்வதற்காகவே இந்த மரம் இந்த நிறத்தைப் பெற்றுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த அம்சத்தைப் பரிணாம வளர்ச்சியின் மூலம் பெற்றுள்ளதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

அடர்ந்த மழைக்காட்டின் நிழலில் கூட, இந்த பளபளப்பான நீலப் பழம் தனித்துத் தெரியும். பறவைகள் இதை நீண்ட தூரத்தில் இருந்து எளிதில் கண்டுபிடித்து, விதைகளைப் பரப்ப உதவுகின்றன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு மேலே பவருக்கு வந்த அசிம் முனீர்..! டம்மியாக்கப்பட்ட ஷாபாஸ் ஹெரீப்..!
இந்தியாவின் எதிரி..! இனி ரஷ்யாவின் எதிரி.. இனி எவனும் வாலாட்ட முடியாது.. வேற லெவல்