வைரஸை வெறுக்காதீர்கள்..!! அதை நம் நண்பனாக்க ஆராயுங்கள், விஞ்ஞானிகள் அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 7, 2020, 8:05 PM IST
Highlights

ஹெர்பஸ் வைரஸ் பிளேக் மற்றும் ஹிஸ்டீரியா போன்ற நோய்களிலிருந்து மனிதனை பாதுகாக்கிறது, வைரஸ் பல நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான மருந்துகளாகவும் மாற்றப்படுகிறது.

தற்போது ஒட்டுமொத்த உலகத்திற்கும் மிகப்பெரும் சவாலாக இருப்பது covid-19 என்ற வைரஸ் என்றால் மிகையாகாது, உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸ் கொத்துக் கொத்தாக  மனித உயிர்களை பலிவாங்கி வருகிறது. மனித குலத்தை அழிக்க வந்த முதல் வைரஸ் இதுவல்ல, வைரஸ்கள் மனித குலத்தை தொடர்ந்து தாக்கி வருகின்றன, 1918 ஆம் ஆண்டில் உலகின் பேரழிவை ஏற்படுத்திய இன்புளுயன்ஸ வைரஸால் 5 முதல் 10 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். பின் இருபதாம் நூற்றாண்டில் மட்டும் பெரியம்மை வைரஸால் குறைந்தது 200 மில்லியன் மக்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என கூறப்படுகிறது. இந்த எடுத்துக்காட்டுகளை பார்க்கும்போது வைரஸ்கள் நமக்கு ஒரு பெரிய ஆபத்து என்றும் அவை பூமியிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்பட வேண்டிய ஒன்று என்ற ஆதங்கம் நமக்கு ஏற்படுகிறது. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் நம்மிடத்தில் இல்லை. அதேநேரத்தில் வைரசை அழிப்பதில் மனிதகுலம் மிக கவனமாக இருக்கவேண்டும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். வைரஸ்கள் அழிந்தால் மனிதர்களும் அழிவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன என்பதே அதற்கான காரணம். அமெரிக்காவின் விஸ்கான்சின் மாடிசன் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் டோனி கோல்ட்பர்க், பூமியில் உள்ள அனைத்து வைரஸ்களும் திடீரென  அழிந்தால், இந்த பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வெறும் ஒன்றரை நாட்களில் அழியக்கூடும் என்கிறார். 

எனவே நமது குறிக்கோள்  தீமையானவைகளை மட்டும் அழிப்பதாக இருக்க வேண்டும், உலகில் எத்தனை வகையான வைரஸ்கள் உள்ளன என்பது இன்னும் தெரியவில்லை, இந்த வைரஸ்களில் பெரும்பாலானவை மனிதர்களில் எந்த நோயையும் பரப்புவது இல்லை என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஆயிரக்கணக்கான வைரஸ்கள் உள்ளன, அவை இந்த பூமியின் சுற்றுச்சூழல் அமைப்பு இயக்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன, அவை  பூச்சிகள், எறும்புகள், ஆடு மாடுகள், எருமைகள், மனிதர்கள் என  அனைத்து இயக்கத்திற்கும் வைரஸ்கள் இன்றியமையாதவையாக உள்ளன என்கிறார். மெக்சிக்கோவின் தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகத்தின் வைரஸ்  நிபுணர் சுசானா லோபஸ் ஷரடன் கூறுகையில், வைரஸ்கள் மற்றும் பிற உயிரினங்கள் இந்த பூமியில் ஒரு முழுமையான சீரான சூழலில் வாழ்கின்றன, மொத்தத்தில் வைரஸ்கள் இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது. இந்த பூமியில் நாம் இயங்குவதற்கு வைரஸ்கள் எத்தனை முக்கியமானதாக இருக்கிறது  என்பது மக்களுக்கு தெரியாது, இதற்கு காரணம் என்னவென்றால் நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களைப் பற்றி மட்டும் நாம் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறோம், ஆனால் தற்போது அறியப்படாத வைரஸ்கள் குறித்தும் விஞ்ஞானிகள் தைரியமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றனர்.

 

இதுவரை சில ஆயிரம் வைரஸ்கள் மட்டுமே மனிதர்களுக்கு தெரிந்திருக்கிறது, ஆனால் நாம் அறியாத பல கோடி வைரஸ்கள் உள்ளன என்கிறார் அவர். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வைரஸ் விஞ்ஞானி  கர்டிஸ் சுட்டல், மொத்த வைரஸ் இனங்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வைரஸ்களின் எண்ணிக்கை
பூஜ்ஜியம் என்கிறார். இது குறித்து தெரிவிக்கும் டோனி கோல்ட்பர்க் என்ற விஞ்ஞானி, கடலில் உள்ள பாக்டீரியா எண்ணிக்கை கட்டுப்படுத்துவதில் பாக்ஸ் வைரஸ் முக்கிய பங்கு வகிக்கிறது,  ஒருவேளை இந்த வைரஸ்கள் அழிந்தால் திடீரென கடலின் சமநிலை மோசமடையும், கடலில் 90 சதவீத உயிரினங்கள், நுண்ணுயிரிகள் வாழ வைரஸ்களே பேருதவியாக இருக்கின்றன. உலகில் உள்ள உயிரினங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வைரஸ்கள் மிக அவசியம், ஒரு உயிரினத்தின் தொகை அதிகரிக்கும் போதெல்லாம், வைரஸ்கள் அதை தாக்கி சமநிலைப்படுத்துகின்றன. வைரஸ்கள் இல்லாவிட்டால் பூமி சமநிலையின்றி ஒரே ஒரு இனம் மட்டும் ஆதிக்கம் செலுத்துவதாக அமைந்துவிடும், இதனால் பல்லுயிர் பெருக்கமும் சீர்குலையும், பல வைரஸ் தொற்று சில வகையான நுண்ணுயிரிகளில் இருந்து மனிதனை பாதுகாக்கிறது, ஹெர்பஸ் வைரஸ் பிளேக் மற்றும் ஹிஸ்டீரியா போன்ற நோய்களிலிருந்து மனிதனை பாதுகாக்கிறது, வைரஸ் பல நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான மருந்துகளாகவும் மாற்றப்படுகிறது. 

1980களில் சோவியத் யூனியனில் இதற்கான ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது உலகின் பல விஞ்ஞானிகள் மீண்டும் வைரஸ் சிகிச்சை குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். நோய் பரப்பும் பாக்டீரியா அல்லது புற்றுநோய் செல்களை அழிக்கவும் வைரஸ்களை பயன்படுத்தலாம், மனித மரபணுக்களில் 8% நமக்கு வைரஸிலிருந்து கிடைத்துள்ளது, 2018 ஆம் ஆண்டில் விஞ்ஞானிகளின் இரண்டு குழுக்கள் நடத்திய ஆய்வில் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வைரஸிலிருந்து நமக்கு கிடைத்த குறியீடுகள் நம் நினைவலைகளை சேமிப்பதில் பெரிய பங்கு வகிக்கின்றன என்பதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் பூமியில் வைரஸ் வகிக்கும் அனைத்து பாத்திரங்களையும் பற்றி ஆராயத் தொடங்கினால், அவற்றை பற்றி மேலும் அரிய தகவல்களை நாம் அறியக்கூடும், வைரஸை சிறப்பாக பயன்படுத்த முடியும், மனித குலத்திற்கு மட்டுமல்லாமல் முழு பூமிக்கும் நல்லது செய்யவும், பல நோய்களை எதிர்த்து போராடுவதற்கான வழிகளையும் அவைகள் நமக்குத் தரும்,  எனவே வைரஸை வெறுப்பதற்கு பதிலாக அவற்றை பற்றி மேலும் அறிய தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என விஞ்ஞானகள் கோருகின்றனர். 
 

click me!