ஜெர்மனியில் மக்கள் மீது காரை மோதச் செய்த சவூதி அரேபிய மருத்துவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுக்குள் புகுந்த கார்
ஜெர்மனி நாட்டின் மக்டேபர்க் நகரில் மிகவும் பிரபலமான கிறிஸ்துமஸ் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் குவிந்து இருப்பது வழக்கம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், கிறிஸ்துமஸ் மார்க்கெட் மக்களின் கூட்டத்தால் களைகட்டி இருந்த்து.
undefined
அப்போது மார்க்கெட்டுக்குள் அதிவேகத்தில் புகுந்த கார் ஒன்று அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாக மோதியது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த மக்கள் நாலாபுறமும் பதறியடித்துக் கொண்டு ஓடினார்கள். ஆனாலும் காரை ஓட்டுவதை நிறுத்தாத நபர், கொஞ்சம் கூட இரக்கமின்றி மக்கள் மீது காரை மோதச் செய்தார்.
8 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய சம்பவம்
இந்த திடீர் தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். ஜெர்மனியில் கடந்த 2016ம் ஆண்டில் தலைநகர் பெர்லினில் மக்கள் கூட்டம் மீது டிரக்கை மோதி தாக்குதல் நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். தற்போது சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய சம்பவம் அங்கு நடைபெற்றுள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் மீது கொடூரமாக காரை மோதச் செய்து தாக்குதல் நடத்திய சவூதி அரேபியாவை சேர்ந்த 50 வயதான தலேப் என்பவர் கைது செய்யப்பட்டார். மருத்துவரான தலேப், பெர்ன்பர்க் என்ற இடத்தில் மருத்துவராக இருந்து வருவதாகவும், மனநல மருத்துவம் மற்றும் உளவியல் சிகிச்சை செய்து வந்ததாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த சவூதி மருத்துவர்
தலேப் கடந்த 2006ம் ஆண்டு சவூதி அரேபியால் இருந்து ஜெர்மனிக்கு வந்து வசிக்கத் தொடங்கினார். 2016ம் ஆண்டு அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன்பிறகு அவர் ஜெர்மனி நாட்டின் நிரந்தர குடியுரிமையை பெற்றுள்ளதாக ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் தமரா சீசாங் தெரிவித்துள்ளார்.
தலேப் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக BMW காரை வாடகைக்கு எடுத்திருந்ததாகவும், இந்த செயலை அவர் மட்டும் தனியாக செய்ததாகவும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை எனவும் தி கார்டியன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதலுக்கான முழு காரணம் குறித்து தலேப்பிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம், வன்முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த கடினமான நேரத்தில் ஜெர்மனி மக்களுடன் துணை நிற்கிறோம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.