உக்ரைன் மீது ரஷியா இன்று 20-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. ஆனால், சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.
தடுமாறும் ரஷியா :
உக்ரைன் போரில் ஆயுதங்களை கணிசமான அளவுக்கு ரஷிய ராணுவம் இழந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் உக்ரைனை சீர்குலைக்க சக்தி வாய்ந்த ஆயுதங்கள் அதிகம் தேவைப்படுவதாக ரஷியா கருதுகிறது. இதற்காக சீனாவிடம் ரஷியா மறைமுகமாக பேச்சு நடத்தி கொண்டிருக்கிறது. ஏவுகணைகள், பீரங்கிகளை தறுமாறு சீனாவிடம் ரஷியா கோரிக்கை விடுத்து உள்ளது.
இதற்கு அமெரிக்க கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. சீனா ஆயுதங்களை கொடுத்து உதவினால் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது. சீனா மீதும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டிய சூழ்நிலைக்கு உலக நாடுகளும் தள்ளப்படும் என்று அமெரிக்கா கூறி உள்ளது. இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்து உள்ளது.
ஜோ பைடனுக்கு ரஷியா தடை :
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததும் அமெரிக்கா பல்வேறு அழுத்தங்கள் கொடுக்க தொடங்கியது. ரஷியா தாக்குதலை நிறுத்தாததால் புதின் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதாரத்தடை விதித்தது. ஐரோப்பிய நாடுகளும் ரஷிய வங்கிகள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுக்கு தடைவிதித்தது.
இந்த நிலையில் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக ரஷியா பொருளாதாரத்தடை விதித்துள்ளது. மேலும், வெளியுறவுத்துறை மந்திரி அந்தோனி பிளிங்டன் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் மீதும் தடைவிதித்துள்ளது. எனினும், வாஷிங்டனுடன் உத்தியோகபூர்வ உறவுகளைப் பேணுவதாகவும், உயர் அதிகாரிகள் இந்த பட்டியலில் உள்ளவர்களுடன் உயர்மட்ட தொடர்புகள் நடைபெறலாம் என ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.