Russia Ukraine War :போர் தொடங்கியது முதல் தற்போது வரை சுமார் 10 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் என ஐநா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
Russia Ukraine War :போர் தொடங்கியது முதல் தற்போது வரை சுமார் 10 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் என ஐநா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா இன்று 8-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ் மீதும் ரஷ்யா தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. உக்ரைனில் கடந்த 24ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. அன்று முதல் தற்போது வரை 10 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் என ஐநா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மக்கள் தொகையில் 2 விழுக்காடு மக்கள் 7 நாட்களில் எல்லையை கடந்துள்ளனர். போர் நீடித்தால் இந்த எண்ணிக்கை 40 லட்சமாக அதிகரிக்கும் என்றும், மிகப்பெரிய விவகாரமாக இது உருவெடுக்கும் என்றும் ஐநா கூறியுள்ளது. இராணுவ தாக்குதல் தொடங்கிய பிப்ரவரி 24ஆம் தேதி 82,000 பேரும், அடுத்தடுத்த நாட்களில் இந்த எண்ணிக்கை நாளொன்றுக்கு 2 லட்சம் என்ற எண்ணிக்கையை தொட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தத்தை அமல்படுத்தி மக்களுக்கு மனிதாபிமான ரீதியிலான உதவிகளை வழங்க வேண்டும் என ஐநா கேட்டுக் கொண்டுள்ளது.இதனிடையே நரகத்தில் வாழ்வது போன்ற தோற்றம் உருவாகியுள்ளதாக உக்ரைன் மக்கள் கூறுகின்றனர். மேலும் எந்த நேரம் குண்டு விழும் என்ற அச்சத்தை மாற்றவே முடியவில்லை என்று வேதனையுடன் கூறுகின்றனர்.
இந்நிலையில் உக்ரைன் உடனான போரில் க்ளஸ்டர் குண்டுகள், தெர்மோபேரிக் ஆயுதங்கள் என தன்னிடம் உள்ள அதிநவீன மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களையும் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், ரஷ்யா அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்துள்ளது. முந்தைய பேச்சுவார்த்தை கோமெல் நகரில் நடந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தை பெலாரஸ் எல்லையில் வேறொரு இடத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.