போரை கைவிட்டு திரும்பவில்லை என்றால் ரஷ்ய படைகள் முற்றிலும் அழிக்கப்படும் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போரை கைவிட்டு திரும்பவில்லை என்றால் ரஷ்ய படைகள் முற்றிலும் அழிக்கப்படும் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரை சுற்றிவளைத்து ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 7 நாட்களை கடந்து போர் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. போரை முடிக்கு கொண்டுவரும் வகையில் உக்ரைன் - ரஷ்யா இடையே பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடந்தது. இரு நாடுகளை சேர்ந்த உயர்நிலை தூதுக்குழு அதிகாரிகள் மட்டத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, போரை உடனடியாக நிறுத்திவிட்டு ராணுவத்தை வெளியேற்றும்படி ரஷ்யாவுக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்தது.
முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு தாக்குதல்கள் நடந்து வருகின்றன. 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா நேற்று அறிவித்துள்ளது. ரஷ்யாவுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக உக்ரைன் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து 8வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உக்ரைனின் பெரு நகரங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்று வரும் நிலையில் போரை கைவிட்டு திரும்பவில்லை என்றால் ரஷ்ய படைகள் முற்றிலும் அழிக்கப்படும் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், அவர்கள் எங்கே சென்றாலும் அழிக்கப்படுவார்கள். அவர்களுக்கு இங்கே அமைதி கிடைக்காது. உணவு இருக்காது. ஆக்கிரமிப்பாளர்கள் உக்ரேனியர்களிடமிருந்து கடும் எதிர் தாக்குதலை மட்டுமே பெறுவார்கள். நாங்கள் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டோம். தேசபக்திக்கான போர் என்றால் என்ன என்று அவர்கள் உணரும் நேரம் இது. ஆம், உக்ரேனியர்களுக்கு இது ஒரு தேசபக்தி போர். தேசபக்தி போர் எப்படி தொடங்கும் என்பதை நாங்கள் அறிவோம். படையெடுப்பாளர்களுக்கு எதிராக அதை எப்படி தொடங்குவது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும் என்று குறிப்பிட்டார்.