
புதன்கிழமை இரவு உக்ரைன் முழுவதும் ரஷ்யா ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் நடத்தியது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 36 பேர் காயமடைந்தனர் என்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழலையர் பள்ளி மற்றும் மின் உற்பத்தி நிலையங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
தலைநகர் கீவ்-வில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 21 பேர் காயமடைந்தனர். கீவ் மாகாணத்தின் புரோவர்ஸ்கி மாவட்டத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
சபோரிஷியா (Zaporizhzhia) மாகாணத்தில் குறைந்தது 15 பொதுமக்கள் காயமடைந்தனர் என்று ஆளுநர் இவான் பெடோரோவ் (Ivan Fedorov) தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் மிகப்பெரிய தனியார் எரிசக்தி வழங்குநரான டிடெக் (DTEK), ஒடேசா (Odesa) மாகாணத்தில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பு கணிசமான சேதத்தை சந்தித்துள்ளதாகவும், கீவ் மற்றும் அதன் அருகில் உள்ள மாகாணங்களில் மின்வெட்டுகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
உள்ளூர் அரசு சாரா நிறுவனம் (NGO) அளித்த தகவலின்படி, காலை 11.00 மணியளவில் (உள்ளூர் நேரம்) ஒரு மழலையர் பள்ளி மீது மூன்று டிரோன்கள் தாக்கியுள்ளன. அப்போது ஒலித்த விமானத் தாக்குதல் எச்சரிக்கை (Air Raid Sirens) காரணமாக, அங்கிருந்த 48 குழந்தைகளும் நிலத்தடி தங்குமிடத்துக்கு (Underground Shelter) உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
தாக்குதலில் ஒரு வழிப்போக்கர் கொல்லப்பட்டார் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக, வெளியேற்றப்பட்ட குழந்தைகள் யாரும் காயமடையவில்லை என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy), புதன்கிழமை நடந்த ரஷ்யாவின் குண்டுவீச்சு, "போரை இழுத்தடிப்பதில் இருந்து விலக போதுமான அழுத்தத்தை கிரெம்ளின் (ரஷ்யா) தெளிவாக உணரவில்லை" என்பதைக் காட்டுவதாகக் கூறினார்.
இந்தத் தாக்குதல்கள், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியை "நேர விரயம்" என்று கூறி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்னுடனான (Vladimir Putin) திட்டமிடப்பட்ட சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) ரத்து செய்த அறிவிப்புக்கு மத்தியில் வந்துள்ளது.
போர்க்களத்தில், ரஷ்யா மேலும் இரண்டு உக்ரைனிய கிராமங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் (Dnipropetrovsk) பிராந்தியத்தின் உள்ளே அமைந்துள்ள இவானிவ்கா (Ivanivka) கிராமத்தையும், ரஷ்யா உரிமை கோரும் நான்கு பகுதிகளில் ஒன்றான சபோரிஷியா-வில் உள்ள பாவ்லிவ்கா (Pavlivka) கிராமத்தையும் தங்கள் படைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.
மேலும், ரஷ்ய செய்தி நிறுவனங்கள், கார்ன்டைனி தீவை (Karantynnyi Island) ரஷ்யப் படைகள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. இது கெர்சன் (Kherson) நகருக்கு அருகிலுள்ள டினிப்ரோ ஆற்றைக் கடந்து செல்லும் ஒரு பகுதி ஆகும்.
இதற்கிடையில், டொனெட்ஸ்கில் (Donetsk) உள்ள குச்சேரிவ் யார் (Kucheriv Yar) கிராமத்தை ரஷ்யப் படைகளிடமிருந்து மீண்டும் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.