தென் கொரியாவில் ஜெஜு ஏர் விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையில் வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 174 பேர் உயிரிழந்துள்ளனர். தரையிறங்கும் கருவியில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்குக் காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜெஜு ஏர் நிறுவனத்தின் போயிங் 737-800 ரக விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் 181 பேர் பயணித்தனர். இதில் 174 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நடந்தபோது பதிவான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இரட்டை எஞ்சின் கொண்ட விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி வேலி மீது மோதுவதை காணொளியில் காணலாம்.
ஓடுபாதையில் விமானம் வேகமாக தரையிறங்குவதை காணொளி காட்டுகிறது. தரையை அடைந்த பின்பும் வேகம் குறையாமல், நேராகச் சென்று வேலியில் மோதியது. மோதியவுடன் விமானம் தீப்பிடித்தது. சில நொடிகளில் வானில் கரும்புகை சூழ்ந்தது. விமானத்தின் பல பகுதிகளில் தீப்பிழம்புகள் எழும்பும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
Horrible plane crash in South Korea. pic.twitter.com/LJogLyJ3ZD
— Trey Yingst (@TreyYingst)
விமான விபத்துக்குக் காரணம்:
விமானத்தின் தரையிறங்கும் கருவியில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்குக் காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் விபத்துக்குள்ளாகும் சில நொடிகளுக்கு முன்பு 'பெல்லி லேண்டிங்' முயற்சித்தது போல் காணொளியில் தெரிகிறது. பெல்லி லேண்டிங்கில் விமானத்தின் சக்கரங்களுக்குப் பதிலாக அதன் அடிப்பகுதி ஓடுபாதையில் படும். பிரேக்குகள் சக்கரங்களில் செயல்பட்டு விமானத்தை நிறுத்தும். ஆனால் பெல்லி லேண்டிங்கில் இது சாத்தியமில்லை. இதனால் விமானம் ஓடுபாதையைத் தாண்டி வேலியில் மோதியது.
விமானத்தில் 181 பேர்
விபத்துக்குள்ளான விமானத்தில் 181 பேர் பயணித்தனர். இதில் 6 பேர் விமானப் பணியாளர்கள். விபத்துக்குப் பிறகு மீட்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன. விமான நிலையத்தில் இருந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க அனுப்பப்பட்டன. விமானத்தில் இருந்த பயணிகள் மீட்கப்பட்டனர்.
பாங்காக் டூ முவான் சென்ற விமானம்
ஆன்லைன் விமானக் கண்காணிப்பு இணையதளமான FlightRadar24 தகவலின்படி, விமானம் பாங்காக்கில் இருந்து முவான் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தென் கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சாங்-மோக் மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அவரது தலைமை அதிகாரியும் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார்.
பறவைகள் மோதியதால் தரையிறங்கும் கருவியில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சமீபத்திய தகவல்களின்படி இந்த விபத்தில் 174 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.