
ஈரானில் பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம் என்ற இஸ்லாமிய மதச் சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் உச்ச தலைவரான அயத்துல்லா அலி காமேனியின் மூத்த பாதுகாப்பு அதிகாரியின் மகள் திருமண வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த வீடியோ ஹிஜாப் சட்டத்தில் ஈரானின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்தியுள்ளது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பரில், மாஷா அமினி (22) என்ற இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி, ஈரான் போலீசார் அவரைக் கடுமையாகத் தாக்கினர். அந்தத் தாக்குதலில் கோமா நிலைக்குச் சென்ற மாஷா அமினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, ஈரான் முழுவதும் பெண்கள் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் குதித்த பெண்கள் தங்கள் ஹிஜாப்புகளைக் கழற்றி எரிந்தும், தலைமுடியை வெட்டியும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்தப் போராட்டத்தை ஒடுக்க ஈரான் பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் நிகா ஷாகராமி, ஹதீஸ் நஜாபி, சரீனா இஸ்மாயில்ஜடே உள்ளிட்ட பல இளம் பெண்களும் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினர் பெண்களின் முகம், மார்பகம் மற்றும் அந்தரங்க உறுப்பைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை வழிநடத்திச் சென்ற அலி ஷாம்கனியின் மகளின் திருமணம் 2024-ஆம் ஆண்டில் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ஈரானின் உண்மை நிலையை வெளிப்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஷாம்கனியின் மகள் ஃபாத்திமா, தெஹ்ரானில் உள்ள உயர்தர ஆடம்பரமான எஸ்பினாஸ் பேலஸ் (Espinas Palace) ஓட்டலில் நடந்த திருமண விழாவிற்கு அழைத்து வரப்படுகிறார்.
அப்போது மணமகள் ஃபாத்திமா முகம் முழுவதும் தெரியும் வகையிலும், கைப்பகுதி மறைக்கப்படாமலும் வெள்ளை நிற கவுன் அணிந்திருக்கிறார். உடலை அரைகுறையாக மறைத்த ஆடையுடன் அவர் நடந்து வருகிறார்.
அதேபோல், ஷாம்கனியின் மனைவியும் (மணமகளின் தாயார்) நீல நிற கவுனை அணிந்தபடி, முதுகுப் பகுதி தெரியும் வகையிலான ஆடையை அணிந்துள்ளார். அவரும் ஹிஜாப் அணியவில்லை. அந்த வீடியோவில் காணப்படும் வேறு சில பெண்களும்கூட ஹிஜாப் அணியாமல் உலா வருகின்றனர்.
பல தசாப்தங்களாக ஹிஜாப் கட்டாயம் என சட்டம் நடைமுறையில் உள்ள ஈரானில், மணமகள் மற்றும் அவருடைய தாயார் இருவரும் மேற்கத்திய பாணியிலான ஆடைகளை அணிந்திருந்தது பேசுபொருளாகியுள்ளது.
ஹிஜாப்பை சரியாக அணியாததற்காக சாதாரணப் பெண்கள் கடுமையாகத் தாக்கப்படும் நிலையில், நாட்டின் உச்ச தலைவருக்கு நெருக்கமானவர் வீட்டுத் திருமணத்தில் பெண்கள் ஹிஜாப் விதிகளை மீறியுள்ளனர். இது அயத்துல்லா அலி காமேனியின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஈரானில் இருந்து வெளியேறிய மசி அலினிஜாத் உள்ளிட்டோர் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். “பல தசாப்தங்களாக ஹிஜாப் கட்டாயம். ஆனால் ஷாம்கனியின் மகள் இதுபோன்ற ஆடைகளை அணிகிறார். அதே சமயம், சாமானிய ஈரானியப் பெண்கள் தங்கள் தலைமுடி வெளியே தெரிந்ததற்காகக் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள்,” என்று அலினிஜாத் தெரிவித்துள்ளார்.
ஈரானியப் பெண் உரிமை ஆர்வலர் எல்லீ ஆமித்வாரி, “புதிதாகத் திருமணம் செய்து கொண்ட இளம்பெண்கள் உட்பட பலர் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டனர். ஆனால், அவர்களின் (ஷாம்கனி) மருமகள் அரண்மனையில் வசதியாக இருக்கிறார்,” என்று வேதனையுடன் கூறியுள்ளார். தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும் இந்தச் சம்பவத்தை போலித்தனம் என்று சாடியுள்ளது.
இந்த வீடியோ விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், அலி ஷாம்கனி இதற்கு விளக்கமளித்துள்ளார். 2024 ஏப்ரலில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை இஸ்ரேல் தான் கசியவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இது தனியுரிமை மீறல் எனவும் அவர் கூறியுள்ளார்.