இலங்கையில் துப்பாக்கிச் சூடு - அமைச்சரின் பாதுகாவலர்கள் இருவர் படுகாயம்.

By sathish k  |  First Published Oct 28, 2018, 2:44 PM IST

இன்று ரணிலுக்கு கொடுக்கப்பட்டிருந்த மூன்றடுக்கு பாதுகாப்பு இலங்கை அரசால் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாகனத்தையும் திரும்பப் பெற்றிருக்கிறது இலங்கை அரசு. இந்நிலையில் சபாநாயகர் கரு ஜெயசூர்யா ரணில் தான் பிரதமர் என்று மறுத்து சிறிசேனாவுக்கு கடிதம்  எழுதியுள்ளார். தற்போது அங்கே பெட்ரோலிய அமைச்சகத்தின் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.


இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கேவை நீக்கிவிட்டு கடந்த சனிக்கிழமையன்று ராஜபக்சேவை பிரதமராக நியமித்துள்ளார் அதிபர் சிறிசேனா. நாடாளுமன்றத்தைக் கூட்டாமலேயே இத்தகைய நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்கே, தன்னை பிரதமர் பதவியிலிருந்து நீக்க அதிபர் சிறிசேனாவுக்கு அதிகாரமில்லை என்றும், நாடாளுமன்றத்தை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திய பின்பே தன்னை பதவி நீக்கம் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார். ஆனால் இன்று ரணிலுக்கு கொடுக்கப்பட்டிருந்த மூன்றடுக்கு பாதுகாப்பு இலங்கை அரசால் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாகனத்தையும் திரும்பப் பெற்றிருக்கிறது இலங்கை அரசு.

Latest Videos

திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில், "நடுராத்திரியில் இலங்கையில் நடத்தபட்ட இந்த நாடகம் ஈழத் தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் அச்சுறுத்துவதாக உள்ளது. தமிழர்களை அழிப்பதை கொளகையாகக் கொ்ண்ட ராஜபக்சே பிரதமராவது ஏற்கவியலாதது. தமிழர்களின் மற்றும் மீனவர்களின் பாதுகாப்பு மேலும் கேள்விக்குறியாகியுள்ளது" என்றார்.

"ஏற்கனவே விக்கிரமசிங்கே இந்திய அரசு தனது ரா உளவு அமைப்பின் மூலம் தன்னைக் கொல்லப் பார்ப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இலங்கையின் அமைச்சர்கள் முதலியோர் இந்தியாவிற்கு வருவது அந்தச் சதிவேலையின் காரணமாகவே என்றும் கூறியிருந்தார். நயவஞ்சகங்கள் நிறைந்த இலங்கையின் இந்தப் போக்கை இந்தியா கவனமாகக் கையாளவேண்டும்" என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

வி.சி.கவின் தலைவர் தொல் திருமாவளவன் கூறுகையில், "இந்தியாவின் பாதுகாப்பிற்கு இது அச்சுறுத்தலான நிகழ்வு என்றார். இலங்கையின் அரசமைப்பில் நடைபெறும் கவிழ்ப்பு விஷயங்கள் இந்தியாவை பாதிக்கும் என்பதால் இந்தியா எச்சரிக்கையாக இருக்கவேண்டும்" என்றார்.

பாமக நிறுவனரின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கூறுகையில், "இதை இலங்கையின் உள்நாட்டு நிகழ்வாகக் கடந்து போய்விடமுடியாது. ராஜபக்சேவை பிரதமராக்கியதில் சீனாவின் உள்கை இருக்க வாய்ப்புள்ளது. இந்திய அரசு விழிப்பாக இருந்திருந்து விக்கிரமிசிங்கேவை பதவி நீக்கவிடாமல் தடுத்திருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யத் தவறியதால் நமது நாட்டின் பாதுகாப்பும் இப்போது கேள்விக்குள்ளாகியிருக்கிறது " என்றார்.

மதிமுக தலைவர் வைகோ கூறுகையில், "2009 ல் ஈழத்தமிழர்களை ராஜபக்சே போர் நடத்தி லட்சக்கணக்கில் படுகொலை செய்தபோது சிறிசேனா அவரது பாதுகாப்புத் துறையில் அங்கம் வகித்து வழிநடத்தினார் என்பதையும், இவர்கள் இருவர் மேலும் ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன என்பதையும் நாம் நினைவில் நிறுத்திக் கொள்ளவேண்டும்" என்றார்.

இதன் அடுத்த திருப்பு முனையாக இன்று மதியம் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா ரணில் விக்ரமசிங்கே தான் அரசியலமைப்பு படி பிரதமர் என்று அங்கீகரிக்கப்பட்டவர் என்று சிறிசேனாவுக்கு கடிதம் எழுதி ராஜபக்சேவுக்கு மறைமுகமாக மறுப்பு தெரிவித்துள்ளார். . தற்போது அங்கே பெட்ரோலிய அமைச்சகத்தின் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

பெட்ரோலியத் துறை அமைச்சர் ரணதுங்கா தனது பாதுகாவலர்களுடன் பெட்ரோலிய அமைச்சக அலுவலகத்தில் நுழைந்து சில ஆவணங்களை எடுக்க முயன்றதாகவும், அதை தடுக்க சிலர் முயன்றதாகவும், இந்த கைகலப்பில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இதில் ரணதுங்காவின் பாதுகாவலர்கள் இருவர் படுகாயமுற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாரேனும் இறந்தார்களா என்பது பற்றி தகவல் வெளிவரவில்லை.

click me!