பிரதமர் ஆக்கிய சிறினோவுக்கு ஆப்பு வைத்த ராஜபக்சே !! அதிபர் ஆதரவு எம்.பி.க்கள் 50 பேருடன் கட்சி தாவினார்!!

By Selvanayagam PFirst Published Nov 12, 2018, 8:50 AM IST
Highlights

இலங்கை அரசியலில் திடீர், திடீரென திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில்  கண்டு அதிபர்  சிறிசேனா ஆதரவு எம்.பி.க்கள் 50 பேருடன் ராஜபக்சே கட்சி தாவியுள்ளார். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் சிறிசேனாவுக்கு  பெரும் பின்னடைவு ஏற்படும் என தெரிகிறது.

முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசில் அமைச்சராக இருந்து அவரை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் சிறிசேனா. விக்ரமசிங்கேயின் உதவியுடன், கடந்த 2015-ம் ஆண்டு அதிபராகப் பதவி ஏற்றார் சிறிசேனா. அதிபர் சிறிசேனா தலைமையிலான சுதந்திரா கூட்டணியும், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தன.

3 ஆண்டுகள் சென்ற நிலையில், ரணில் விக்ரமசிங்கேவுக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த மாதம் 26-ம் தேதி திடீரென வாபஸ் பெற்ற சிறிசேனா, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கினார். அண்மையில் இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்லச் சதி நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதில் விக்ரமசிங்கேயின் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீது அதிபர் சிறிசேனா பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இதனால், கூட்டணிக்குள் பெரும் அதிருப்தி நிலவி வந்தததால் இந்த அதிரடியான நடவடிக்கையை எடுத்தார். அதன்பின், ராஜபக்சேயுடன் (இலங்கை மக்கள் முன்னணி) கூட்டணி அமைத்த அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்து, பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். இதனால் இலங்கையில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.பெரும்பான்மை இல்லாத ராஜபக்சேவை பிரதமராக நியமித்தது செல்லாது என்று விக்ரமசிங்கே எதிர்ப்புத் தெரிவித்தார்.

சபாநாயகர் ஜெயசூர்யாவும் ராஜபக்சே சட்டப்பூர்வ பிரதமர் இல்லை என்று அறிவித்தார். இதனால் சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் அதிபர் சிறிசேனா முடிவுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. நாடாளுமன்றத்தை முடக்கி உத்தரவிட்ட அதிபர் சிறிசேனா, வரும் 14-ம் தேதி கூடும் என்று அறிவித்தார்.

ஆனால் திடீரென நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்த  அதிபர் சிறிசேனா 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

 இந்த நிலையில், திடீர் திருப்பமாக, மகிந்த ராஜபக்சே, சிறிசேனாவின் சுதந்திரா கட்சியில் இருந்து வெளியேறி இலங்கை பொதுஜன முன்னணியில்  இணைந்தார். அவருடன் முன்னாள் எம்.பி. 50 பேரும் கட்சி மாறியுள்ளனர். அவர்கள் அனைவரும் சிறிசேனாவின் சுதந்திரா கட்சி சார்பில் தேர்தலில் நின்று வென்றவர்கள்.

இலங்கை பொதுஜன முன்னணி உள்ளாட்சி தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. அதிபர் தேர்தலுக்கு முன்பு சுதந்திரா கட்சியில் இருந்த அவர் பின்னர் வெளியேறினார். சமீபத்தில் அவர் மீண்டும் சுதந்திரா கட்சியில் இணைந்து பிரதமர் பதவியை பெற்றார். இந்த நிலையில் அவர் மீண்டும் சிறிசேனாவின் சுதந்திரா கட்சியில் இருந்து வெளியேறியுள்ளார். அவருடன் சிறிசேனா ஆதரவு எம்.பி.க்கள் 50 பேரும் தற்போது ராஜ பக்சேவுடன் வெளியேறியுள்ளது மைத்ரிபால சிறிசேனாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் சுத்திரா கட்சியுடன் ராஜபக்சே கட்சி கூட்டணி அமைத்தாலும், சிறிசேனாவின் ஆதரவாளர்கள் தற்போது ராஜபக்சே பக்கம் சென்று விட்டதால் அவருக்கு நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

click me!