ரபேல் போர்விமான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்யும்படி கூறியது இந்தியாதான் என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்காயிஸ் ஹாலண்டே உண்மையை போட்டு உடைத்துள்ளார்.
ரபேல் போர்விமான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்யும்படி கூறியது இந்தியாதான் என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்காயிஸ் ஹாலண்டே உண்மையை போட்டு உடைத்துள்ளார்.
அனுபவம் வாய்ந்த அரசுநிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை தேர்வு செய்யாமல் ஏன் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கொடுத்தீர்கள் என்று காங்கிரஸ் எழுப்பி வந்த கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது.
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர்விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடிக்கு வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2015, ஏப்ரல் 10-ம் தேதி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஹாலண்டேவே சந்தித்து இந்த ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்தார். இதையடுத்து, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் இந்தியாவின் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கூட்டுத்தயாரிப்பில் ஈடுபட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும், அதிகவிலைக்கு விமானம் கொள்முதல் செய்யப்படுகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. மேலும், அரசு நிறுவனமும், அதிகமான அனுபவமும் கொண்ட இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் டசால்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்யாமல் ஏன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யதது என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. ரபேல் ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதையும் காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே பிரான்ஸ் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து கூட்டுத்தயாரிப்பில் ஈடுபடுவதற்கு ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்யக் கோரி எங்களிடம் கூறியதே இந்திய அரசுதான். இந்திய நிறுவனங்களில் எந்த நிறுவனத்துடன் இணைந்து கூட்டுத்தயாரிப்பில் நாங்கள் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் எங்களுக்கு அளிக்கப்படவில்லை. இந்திய அரசுதான் அந்த நிறுவனங்களைத் தேர்வு செய்தது. எங்களுக்கு கொடுக்கப்பட்ட நிறுவனத்தை நாங்கள் பங்குதாரராகச் சேர்த்துள்ளோம எனத் தெரிவித்தார்.
இந்த தகவலால் ரபேல் போர்விமானக் கொள்முதல் விவகாரம் உச்ச கட்ட சூடுபிடித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கூறுகையி்ல், ரபேல் போர்விமான ஒப்பந்தத்தில் மோடி தன்னிட்சையாக முடிவு செய்துள்ளார். நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டார். நொடித்துப் போன அனில் அம்பானிக்கு உதவுவதற்காகவே கோடிக்கணக்கான மதிப்புள்ள ஒப்பந்தம் கிடைக்க பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் உதவியுள்ளார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.