இந்தியா உள்பட 13 நாட்டு மக்கள் உள்ளே வராதிங்க… கரோனா பீதியால் கத்தார் அரசு உத்தரவு

By Asianet Tamil  |  First Published Mar 10, 2020, 1:31 PM IST

கரோனா வைரஸ் பரவும் வேகம் தீவிரமடைந்திருப்பதால் இந்தியா உள்பட 13 நாடுகளில் இருந்து வரும் மக்கள் தங்கள் நாட்டுக்குள் நுழையத் தடை விதித்து கத்தார் நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
 


சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸுக்கு இதுவரை 3,400 பேருக்கும் அதிகமாகப் பலியாகியுள்ளார்கள். உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 586 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து இருப்பதால், பல்வேறு நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் வளைகுடா நாடான கத்தார் அரசு  இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்தவர்களை தங்கள் நாட்டுக்குள் நுழையத் தடை விதித்துள்ளது.

இது குறித்து கத்தார் அரசு  வெளியிட்ட அறிவிப்பில் ''கரோனா வைரஸ் (கோவிட்-19) உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருவதையடுத்து, முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதன்படி, இந்தியா, வங்கதேசம், சீனா, எகிப்து, ஈரான், லெபனான், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, இலங்கை, சிரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் மக்களுக்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்படுகிறது.

Latest Videos

இந்த நாடுகளைச் சேர்ந்த மக்களுக்குத் தற்காலிகமாக விசா வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. கத்தார் வந்து விசா பெற்றுக்கொள்ளும் முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கு பணிக்காக வருபவர்களுக்கு பெர்மிட்டும், தங்கியிருப்பவர்களுக்கான பெர்மிட்டும் நிறுத்தப்படுகிறது" எனத் தெரிவி்க்கப்பட்டுள்ளது

இதற்கிடையே இந்தியாவின் 13 நகரங்களில் இருந்து வாரத்துக்கு 102 விமானங்களை கத்தார் ஏர்வேஸ் இயக்கி வருகிறது. இந்த விமானச் சேவையையும் கத்தார் ஏர்வேஸ் நிறுத்தவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இந்தியா உள்பட 6 நாடுகளில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமானச் சேவையையும் நிறுத்துவதாக குவைத் அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!