ஈரானில் சாராயம் குடித்தால் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என வதந்திகள் பரவவே அதை நம்பி மக்கள் சாராயத்தை தேடித்தேடி வாங்கி குடிக்க தொடங்கி உள்ளனர். இதில் தடையை மீறி கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் அங்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. தற்போது 3,136 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளனர்.
undefined
சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. அங்கு 463 பேர் பலியாகி இருக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையில் இருந்து அத்துமீறி வெளியேறினால் 3 மாதம் சிறை தண்டனை அல்லது 18 ஆயிரம் அபராதம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிலும் கொரானாவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் 46 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர்.
ஈரான் நாட்டில் கொரானாவின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அங்கு 237 பேர் பலியாகி இருக்கும் நிலையில் 7,161 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில் ஈரானில் சாராயம் குடித்தால் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என வதந்திகள் பரவவே அதை நம்பி மக்கள் சாராயத்தை தேடித்தேடி வாங்கி குடிக்க தொடங்கி உள்ளனர். இதில் தடையை மீறி கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் அங்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுமார் 220 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ‘மெத்தனால்’ என்ற வேதிப்பொருள் கலந்த சாராயம் குடித்ததால் உயிரிழப்பு நிகழ்ந்திருப்பதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.