நியூசிலாந்தில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்தில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்தில் கடந்த மாதம் 17-ம் தேதி நடந்த பொது தேர்தலில் பெண் பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த அமைச்சரவையில் புதியதாக 5 அமைச்சர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சராக நியமிக்கப்பட்ட 5 பேரில் பிரியங்கா ராதாகிருஷ்ணன் என்பவரும் ஒருவர்.
41 வயதாகும் பிரியங்கா ராதாகிருஷ்ணன் சென்னையில் கடந்த 1979-ம் ஆண்டு பிறந்தவர். சிங்கப்பூரில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, நியூசிலாந்தில் குடியேறி மேல்படிப்பை முடித்தார். இவரது பூர்வீகம் கேரள மாநிலம் கொச்சி பரவூர் ஆகும். இவரது தாத்தா மருத்துவராக பணியாற்றியவர். முதலில், கடந்த 2017-ம் ஆண்டு எம்.பி.யாக பிரியங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் 2019ம் ஆண்டு இன விவகாரங்களுக்கான நாடாளுமன்ற தனி செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பிரதமர் ஜெசிந்தாவின் அமைச்சரவையில் சமூக மற்றும் தன்னார்வ துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை இணை அமைச்சர் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து வரலாற்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.