கொரோனா கொடுமையிலும் தனியார் பள்ளிகள் கட்டண கொள்ளை..!! தலையிட்டு தடுக்க கல்வி கட்டண நிர்ணயக்குழுவிற்கு கடிதம்.

By Ezhilarasan BabuFirst Published Jul 31, 2020, 4:55 PM IST
Highlights

மாநில அளவிலான கல்வித்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் செயல்படும் தனியார் பள்ளிகளில் அரசு கூறும் கல்வி கட்டணம் சார்ந்த வழிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்று மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். 

ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்ரமணியன் தலைமையிலான தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டண நிர்ணயக்குழுவிற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. அவை பின்வருமாறு...

 கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது, அனைத்து மாணவர்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கின்றது. நமது மாநிலத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளில் நிர்ணயிக்கப்படும் அதிகப்படியான கல்வி கட்டணத்தால் ஏழை, எளிய மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தையே இல்லாமல் ஆக்கக்கூடிய வகையில் இருக்கின்றது. மேலும் கடந்த காலங்களில் பல தனியார் பள்ளிகள் முறையாக அரசு நிர்ணயம் செய்த கட்டணத்திற்கு மேல் வசூல் செய்து வருகின்றது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் கலங்கம் ஏற்படுகின்றது.

தற்பொழுது கொரோனா பெருந்தொற்றின் காரணத்தால் ஏழை, எளிய மாணவர்களால் முழுமையாக கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கடந்த காலங்களை விட குறைந்த கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யுமாறு தாங்கள் பரிந்துரைக்க வேண்டி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம் குறித்து அரசிற்கு அறிக்கை தயார் செய்யும் ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்ரமணியன் ஆகிய தங்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கல்வி கட்டண நிர்ணயக் குழுவிற்கு நாங்கள் சில கோரிக்கைகளை இங்கு முன் வைக்கின்றோம். 

கோரிக்கை 1 :மாநில அளவிலான கல்வித்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் செயல்படும் தனியார் பள்ளிகளில் அரசு கூறும் கல்வி கட்டணம் சார்ந்த வழிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்று மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அவ்வாறு அரசின் வழிமுறைகளை மீறும் தனியார் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்து பள்ளிகளின் உரிமைகளை ரத்து செய்ய தாங்கள் பரிந்துரைக்க வேண்டும்.

கோரிக்கை  2 :தற்போதைய சூழல் கடந்த காலங்களை போல் இல்லாமல் கொரோனா பெருந்தொற்று காலமாக இருப்பதால் மாணவர்களின் பெற்றோர்கள் பலர் தங்களது வேலைகளை இழந்தும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு குறைந்த அளவு வருமானத்தில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கப்படாததாலும், நேரடியாக வகுப்புகள் நடைபெறாததாலும் பள்ளிகளுக்கு செலவினங்கள் குறைவாகவே இருக்கும். எனவே கட்டண நிர்ணயக்குழு இதனையும் கருத்தில் கொண்டு கடந்தகாலங்களை விட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை 50% ஆக குறைத்து அறிவிக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். 

கோரிக்கை 3 :எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை புதிய மாணவர் சேர்க்கைகளில் மாணவர்களிடம் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிகமாக வசூல் வேட்டைகளில் தனியார் பள்ளிகள் ஈடுபடுகின்றது. தமிழ்நாட்டில் உள்ள நர்சரி, பிரைமரி, மற்றும் மெட்ரிக் போன்ற தனியார் பள்ளிகளின் வசதிகளைப் பொறுத்து நியாயமான கட்டணத்தை நிர்ணயித்தால் பிரச்சனை இருக்காது. ஆகவே அரசு உடனடியாக அனைத்து கட்டண விவரங்களையும் பள்ளி வாரியாக இணையதளங்களில் வெளியிடுவதுடன், எல்லா பள்ளிகளில் உள்ள அறிவிப்பு பலகையிலும், பள்ளிகளின் முன் பெரிய எழுத்துக்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்ணில் படும்மாறு அறிவிப்பு செய்ய தாங்கள் பரிந்துரைக்க வேண்டும். மேலும் நமது மாநிலத்தில் பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு இன்னும் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. அந்தப் பணிகளை கட்டண நிர்ணயக் குழு விரைந்து முடிக்க வேண்டும்.

கோரிக்கை  4: தங்கள் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் பல மாணவர்களின் பெற்றோர்கள் அதிக கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் பற்றி புகார் அளிக்க முன் வருவது இல்லை. ஆகவே அரசு புகார் அளிக்கும் பெற்றோர்கள் குறித்த ரகசியங்களை வெளியிடாத வகையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் பள்ளிகள் மீது வரும் புகார்களை பெற்று கொண்டோம் என்பதனை உறுதிப்படுத்த ரசீது போட்டு புகார்தாரரிடம் கொடுத்து வெளிப்படை தன்மையுடன் விசாரித்து தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு தாங்கள் பரிந்துரை செய்ய வேண்டும். 

கோரிக்கை  5 :தனியார் பள்ளிகள் தாங்கள் பெறும் முழுக் கட்டணத்திற்கும்  ரசீது வழங்காமல் வெறும் சொற்ப பணத்திற்கு மட்டுமே ரசீது போட்டுக் கொடுக்கின்றனர். ஆகவே மாணவர்கள் செலுத்தும் அனைத்து கட்டணத்திற்கு முறையாக ரசீது வழங்கப்பட வேண்டும் என்பதும் அதை மீறுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும்.

கோரிக்கை  6 :கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 % ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு அதிகமான தனியார் பள்ளிகள் அரசு சொன்ன விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. அரசு அதனை மாவட்ட வாரியாக ஆய்வு செய்து ஏழை மாணவர்களை சேர்க்காத பள்ளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க தாங்கள் பரிந்துரைக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் நலனிற்கு முக்கியத்துவம் கொடுத்து கல்வி கட்டண நிர்ணயக் குழு அரசுக்கு இக்கோரிக்கைகளை பரிந்துரை செய்ய வேண்டும் என்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம் என அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!