எல்லையில் பதற்றம்...!! அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 17, 2020, 4:02 PM IST
Highlights

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன வீரர்களிடையே திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட மோதலை அடுத்து இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன வீரர்களிடையே திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட மோதலை அடுத்து இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். வரும் ஜூன்-19 அன்று மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெறும் என பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து  கொள்ளலாம் என்றும், கொரோனா தொற்று காரணமாக அந்தக் கூட்டம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்திய-சீன  எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது, மே-22ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய ராணுவம் எல்லை மீறி விட்டதாக கூறி சீனா ஏராளமான படைகளை குவித்தது, அதைத்தொடர்ந்து இந்திய ராணுவமும் படைகள் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் இருநாட்டுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. 

பதற்றத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தணித்துக் கொள்வது என இருநாடுகளும் முடிவு செய்த நிலையில், இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை  இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய  ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர், அதேபோல் சீன தரப்பிலும் 35 ராணுவத்தினர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில்  இந்திய ராணுவ வீரர்கள்  வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இந்நிலையில் எல்லையில் நடந்த  அசம்பாவிதம் குறித்து பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் மோடிக்கு தகவல் தெரிவித்தார், இதனையடுத்து பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  பாதுகாப்பு படை தலைவர் பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம் நரவானே, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் முப்படை தலைவர்களுடன் எல்லை விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். 

அதில் எல்லையில் கூடுதல்  படைகளை குவிக்கவும், மேலும் எல்லை நிலைமைகளை தீவிரமாக கண்காணிக்கவும் மோடி உத்தரவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் எல்லை நிலைமை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் குறித்து, உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அதிகாரப்பூர்வ செய்திதொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா இருநாட்டுக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, இருப்பினும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எல்லைக் கோட்டு பகுதியை மதிக்க  சீனா தவறிவிட்டது, சீனா எல்லையில் ஒருதலைப்பட்சமாக நிலைமையை  மாற்ற முயற்சித்ததன் விளைவாக இருதரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது, உயர்மட்ட அளவில் ஏற்பட்ட உடன்படிக்கைகளை சீனா பின்பற்றியிருந்தால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டு இருக்கக்கூடும், உரையாடல்கள் மூலம் வேறுபாடுகளை தீர்க்க முடியும் என இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது, அதேநேரத்தில் எல்லையில் இந்திய இறையாண்மை உறுதியானது நிலையானது எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

click me!