#UnmaskingChina: சண்டை வேண்டாம்... பேசி தீர்த்துக்கலாம் வாங்க... இந்தியாவிற்கு வெள்ளை கொடி காட்டும் சீனா..!

By vinoth kumarFirst Published Jun 17, 2020, 3:43 PM IST
Highlights

எல்லைப்பிரச்சினை தொடர்பாக இனி எந்த ஒரு மோதலையும் சந்திக்க சீனா விரும்பவில்லை என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

எல்லைப்பிரச்சினை தொடர்பாக இனி எந்த ஒரு மோதலையும் சந்திக்க சீனா விரும்பவில்லை என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவிக்கிறது. ஆனால், இதுவரை சீனா எந்தவிதமான அதிகாரபூர்வமான தகவலையும் வெளியிடவில்லை. இதனால், எல்லைப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. 

இந்நிலையில் கிழக்கு லடாக்கில் நிலவும் சூழல், பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதிகள், ராணுவ தலைமை அதிகாரி பிபின் ராவத் ஆகியோருடன்  ஆலோசனை நடத்தினார்.அப்போது, லடாக்கில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் தியாகம், துணிச்சலை நாடு மறக்காது என்று கூறிய அவர், ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூவா லிஜான், பெய்ஜிங்கில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் எல்லை தொடர்பான விவகாரங்களை பேச்சுவார்த்தை முலம் தீர்க்க இந்தியா முன்வரவேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். இனி எந்த ஒரு மோதலையும் சந்திக்க சீனா விரும்பவில்லை. எல்லை பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும். தூதரக ரீதியிலும் ராணுவ ரீதியிலும் சமரச முயற்சி நடைபெற்று வருகிறது. நடந்ததில் எது சரி, எது தவறு என்பதில் சீன அரசு தெளிவாக உள்ளது. இந்திய துருப்புகள் நெறிமுறைகளை மீறி சீன துருப்புகளை தாக்கியது. கால்வான் பள்ளத்தாக்கு பகுதியின் இறையாண்மை எப்போதும் சீனாவுக்கு சொந்தமானது. 

இப்போது நடந்த சம்பவத்திற்கு சீனாவை குறைகூற முடியாது. இந்தியா தனது முன்கள துருப்புக்களை ஒழுங்குபடுத்த வேண்டும். அத்துமீறல் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்று கூறினார். ஆனால், சீனத் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள், காயமடைந்துள்ளார்கள் என்ற கேள்விக்கு சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

click me!