இலங்கையில் விலை வாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மக்களின் தொடர் போராட்டம் மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக தனது பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு
இலங்கையில் விண்ணை முட்டும் அளவிற்கு விலை வாசியானது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையோடு இலங்கை மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே வேளையில் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த கூட்டணி கட்சியினரும் வாபஸ் பெற்றுள்ளனர். இந்தநிலையில் பொருளாதார நெருக்கடி ஒருபுறம், அரசியல் நெருக்கடி மறுபுறம் என ராஜபக்ஷே சிக்கி தவித்தார். கடந்த வாரம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டில் நடைபெற்ற சிறப்பு கேபினட் கூட்டத்தில், பிரதமர் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியது. மேலும், தான் பதவி விலகுவது மட்டும்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு என்றால் அதைச் செய்ய தான் தயாராக இருப்பதாக கூட்டத்தில் மகிந்த ராஜபக்சே உருக்கமாகப் பேசியதாகவும் தகவல் வெளியானது.
ராஜபக்சே ராஜினாமா
இந்தநிலையில் இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தகவலை இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை அதிபரிடம், பிரதமர் ராஜபக்சே வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதையடுத்து இலங்கையில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பிரதமர் பதவி வகித்து வந்த ராஜபக்சே பதவி விலகியுள்ளது இலங்கை மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதும் இலங்கை அதிபரும் பதவி விலக வேண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.