இங்கிலாந்தில் துணை மேயர் பதவி.. கெத்து காட்டிய சென்னை பெண்.. யார் தெரியுமா?

By Kevin KaarkiFirst Published May 9, 2022, 11:26 AM IST
Highlights

புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த மோனிகா தேவேந்திரன் பள்ளி, கல்லூரி படிப்புகளை இங்கேயே முடித்து மருத்துவர் ஆனார். 

இந்தியர்கள் மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் உலக அரங்கில் பெரும் புகழ் பெறுவது சாதாரண காரியமாகி விட்டது. கடந்த காலங்களில் துவங்கி இன்று வரை பலர் உலக அரங்கில் இந்தியா மட்டும் இன்றி தமிழர் பெயரை நிலைநிறுத்தும் வகையிலும், பெருமை அடையச் செய்யும் வகையிலும் பல்வேறு சாதனைகளை உரிதாக்கி இருக்கின்றனர். அந்த வரிசையில், தமிழகத்தை சேர்ந்த பெண் இந்தியாவுக்கு பெருமை தேடி கொடுத்துள்ளார். 

தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்ட மோனிகா தேவேந்திரன் இங்கிலாந்தின் ஆம்ஸ்பரி டவுன் கவுன்சில் துணை மேயராக பொறுப்பேற்று இருக்கிறார். சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த மோனிகா தேவேந்திரன் பள்ளி, கல்லூரி படிப்புகளை இங்கேயே முடித்து மருத்துவர் ஆனார். அதன் பின் திருமணம் செய்து கொண்ட மோனிகா தேவேந்திரன் 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். 

பல் அறுவை சிகிச்சை:

இங்கிலாந்தில் பல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்த மோனிகா தேவேந்திரன், கடந்த ஆண்டு ஆம்ஸ்பரி மேற்கு மாவட்ட இடங்களுக்கான கவுன்சிலர் ஆக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போது அங்கு மாநகர தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மோனிகா தேவேந்திரன் போட்டியிட்டார். 

இதில் நகர மன்ற உறுப்பினர்களால் மோனிகா தேவேந்திரன் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். உலக புகழ் பெற்ற ஸ்டோன்பென்ச் மாநகராட்சி ஆம்ஸ்பரியின் கீழ் வருகிறது. கடந்த 1200 ஆண்டுகளாக இந்த பதவி இந்தியர்கள் யாருக்கும் கிடைக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மிக்க மகிழ்ச்சி:

“நான் மற்றவர்களுடன் பழகும் விதம், சேவை மனப்பான்மை உள்ளிட்டவைகளை பார்த்து கவுன்சிலர்கள் இந்த பதவிக்கு என்னை தேர்வு செய்து இருக்கின்றனர். இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கவுன்சிலர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை நான் நிச்சயம் காப்பாற்றுவேன். இனி மக்களுக்கு மேலும் அதிக சேவைகளை செய்து, மக்கள் மத்தியில் நிரந்தர இடம் பிடிப்பேன்” என மோனிகா தேவேந்திரன் தெரிவித்தார்.

“இங்கிலாந்தில் எம்.பி.யாக வேண்டும் என்பதே எனது ஆசை. இதோடு சொந்த ஊருக்கு திரும்ப வரவும் ஆவலோடு இருக்கிறேன். இங்குள்ள பணிகளை பூர்த்தி செய்து, இந்தியா வந்து எனது வெற்றியை பகிர்ந்து கொள்வேன்,” என அவர் மேலும் தெரிவித்தார். 

click me!