
தீபாவளி பண்டிகையையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் தொலைபேசியில் உரையாடினர். அப்போது தீபாவளி வாழ்த்து தெரிவித்த ட்ரம்புக்கு பிரதமர் மோடி நன்றி கூறினார். இதுகுறித்து புதன்கிழமை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்பின் அன்பான வாழ்த்துகளுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும், இந்தியா மற்றும் அமெரிக்காவின் ஜனநாயக நடவடிக்கைகள் மற்றும் உலகளாவிய பொறுப்புகளை அவர் வலியுறுத்தினார். "அதிபர் ட்ரம்ப் அவர்களே, உங்கள் தொலைபேசி அழைப்புக்கும், அன்பான தீபாவளி வாழ்த்துகளுக்கும் நன்றி. இந்த ஒளித் திருநாளில், நமது இரு பெரும் ஜனநாயகங்களும் தொடர்ந்து உலகை நம்பிக்கையால் ஒளிரச் செய்து, பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக ஒன்றுபட்டு நிற்கட்டும்," என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (உள்ளூர் நேரம்) வெள்ளை மாளிகையில் நடந்த தீபாவளி கொண்டாட்டங்களில் பங்கேற்று, இந்திய மக்களுக்கும், இந்திய-அமெரிக்கர்களுக்கும் தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடக்க உரையின்போது, பிரதமர் நரேந்திர மோடியை 'சிறந்த மனிதர்' மற்றும் 'சிறந்த நண்பர்' என்று பாராட்டிய அமெரிக்க அதிபர், வர்த்தகம் மற்றும் பிராந்திய அமைதியில் அமெரிக்க-இந்தியா உறவுகளை எடுத்துரைத்தார்.
"இந்திய மக்களுக்கு எங்களின் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று உங்கள் பிரதமரிடம் பேசினேன். ஒரு சிறந்த உரையாடல் நடந்தது. நாங்கள் வர்த்தகம் பற்றிப் பேசினோம்... அவர் அதில் மிகவும் ஆர்வமாக உள்ளார். பாகிஸ்தானுடன் போர் வேண்டாம் என்று சிறிது நேரத்திற்கு முன்பு நாங்கள் பேசினோம். வர்த்தகம் சம்பந்தப்பட்டிருந்ததால், அதைப் பற்றி என்னால் பேச முடிந்தது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் இல்லை. அது மிகவும் நல்ல விஷயம்," என்று அந்த நிகழ்வில் ட்ரம்ப் கூறினார்.
"அவர் ஒரு சிறந்த மனிதர், மேலும் பல ஆண்டுகளாக அவர் எனக்கு ஒரு சிறந்த நண்பராகிவிட்டார்," என்று அமெரிக்க அதிபர் மேலும் கூறினார்.
இவ்விழாவின் குறியீட்டு முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அதிபர் ட்ரம்ப், “சில நொடிகளில், இருளை வென்ற ஒளியின் வெற்றியின் நம்பிக்கையின் சின்னமாக விளக்கை ஏற்றுவோம்... இது அறியாமைக்கு எதிரான அறிவு, தீமைக்கு எதிரான நன்மை. தீபாவளியின் போது, எதிரிகள் தோற்கடிக்கப்பட்ட, தடைகள் நீக்கப்பட்ட, கைதிகள் விடுவிக்கப்பட்ட பழங்காலக் கதைகளை கொண்டாட்டக்காரர்கள் நினைவு கூர்கிறார்கள்.”
தனது தொடக்க உரைக்குப் பிறகு, வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட ட்ரம்ப் விளக்கை ஏற்றினார்.
இந்த நிகழ்வின் போது, எஃப்பிஐ இயக்குநர் காஷ் படேல், ஓடிஎன்ஐ இயக்குநர் துளசி கப்பார்ட், வெள்ளை மாளிகை துணைப் பத்திரிகைச் செயலாளர் குஷ் தேசாய், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் வினய் மோகன் குவாத்ரா மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் உள்ளிட்ட ட்ரம்ப் நிர்வாகத்தின் பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வெள்ள மாளிகையில் டொனால்ட் டிரம்பின் ஓவல் அறைக்கு எதிரே தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாடப்பட்டுள்ளது. பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் அதற்காக அமைக்கப்பட்டுள்ள கூட்ட அரங்கு அல்லது பொது இடத்தில் மட்டுமே கொண்டாடப்பட்ட நிலையில் முதன் முறையாக தீபாவளி பண்டிகை ஓவல் அறையில் கொண்டாடப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அமெரிக்க-இந்தியா உறவுகளில் இந்திய புலம்பெயர்ந்தோரின் வளர்ந்து வரும் ஈடுபாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், முக்கிய இந்திய-அமெரிக்க வணிகத் தலைவர்கள் அடங்கிய குழுவும் இந்த விழாவில் கலந்து கொண்டது.
வெள்ளை மாளிகையில் நடந்த இந்த கொண்டாட்டம், அமெரிக்க சமூகத்தில் தீபாவளியின் கலாச்சார முக்கியத்துவத்தையும், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நெருங்கிய உறவுகளையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.