போர்ச்சுகல் சென்றார், பிரதமர் மோடி...

First Published Jun 24, 2017, 10:00 PM IST
Highlights
PM Modi Meets Portugals Prime Minister Antonio Costa


அமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்கிறார். இதன் முதற்கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று போர்ச்சுகல் புறப்பட்டுச் சென்றார்.

பிரதமர் நரேந்திர மோடி, போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். தனது பயணத்தின் முதல் நாடாக போர்ச்சுக்கல் செல்கிறார் மோடி. இதற்காக நேற்று காலை பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டுச்சென்றார். அவரை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

போர்ச்சுக்கல் செல்லும் மோடி அந்நாட்டு அதிபர் அந்தோணியா கோஸ்டாவைச் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது.

முதல் முறையாக டிரம்ப்பை சந்திக்கிறார்

பின்னர் அங்கிருந்து அமெரிக்கா செல்கிறார். ஞாயிறு, திங்கள் இரு நாட்கள் அவர் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 26-ந்தேதி அவர் வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பை சந்தித்து பேச உள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இரு தலைவர்களும் சந்தித்துக்கொள்வது சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

எச்.1-பி விசா மற்றும் பாகிஸ்தானின் தீவிரவாத போக்கு ஆகியவை பற்றி டிரம்ப்புடன் மோடி விவாதித்து ஆலோசனை நடத்துவார். இந்த விவகாரங்களில் இந்தியாவுக்கு சாதகமான அம்சத்தை அமெரிக்கா மேற்கொள்ள, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்காவிடம் மோடி வலியுறுத்துவார்.

ஜனாதிபதி டிரம்ப் சந்திப்புக்கு பிறகு சில அமெரிக்க அமைச்சர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். மேலும் அமெரிக்க தொழில் அதிபர்களையும் அவர் சந்தித்து இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைக்கவுள்ளார்.

இவை தவிர அமெரிக்க வாழ் இந்தியர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.

நெதர்லாந்து

இதையடுத்து, பிரதமர் மோடி நெதர்லாந்து செல்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் மூலம், போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து நாடுகளுடன் சுமுகமான உறவு பேணப்படுவது மட்டுமல்லாமல், வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் இணைந்து செயல்படுவதற்கான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

27-ந்தேதி நெதர்லாந்து நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்க இருக்கிறார். முதலில் அவர் நெதர்லாந்து நாட்டு பிரதமர் மார்க் ரூட்டியை சந்திக்க உள்ளார். அப்போது இந்தியா - நெதர்லாந்து இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

பிறகு நெதர்லாந்து அரசர் வில்லியம் அலெக்சாண்டர், அரசி மேக்சிமா ஆகியோரை மோடி சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்தியாவும் நெதர்லாந்தும் தூதரக உறவை ஏற்படுத்தி 70 ஆண்டுகளை நிறைவு செய்கின்றன.

இது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேசவுள்ளனர். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் நெதர்லாந்துடன் சில முக்கிய ஒப்பந்தங்களை இந்தியா செய்யவுள்ளது. இதையடுத்து 3 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 28-ந்தேதி பிரதமர் மோடி நாடு திரும்புகிறார்.

click me!