அதாவது பிரிட்டனில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பன்மடங்கு உயர்ந்து வருகிறது, கடந்த 7 நாட்களில் மட்டும் பிரிட்டனில் தினசரி சுமார் 40 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உலக அளவில் கொரோனா வைரசுக்கு எதிராக முதல் முறையாக அந்த வைரஸை கட்டுப்படுத்தும் மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த மாத்திரைக்கு பிரிட்டன் அரசு அவசரகால அனுமதியும் வழங்கியுள்ளது. உலகம் முழுதும் பூரண வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் முதல்முறையாக கொரோனா வைரஸ் மாத்திரை மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது பலரையும் ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. இந்த வைரசால் 150க்கும் அதிகமான நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் அமெரிக்காவும், இந்தியாவும்அடுத்தடுத்த நிலையில் உள்ளன, இந்த வைரசுக்கு எதிராக இந்தியா உள்ளிட்ட பல முன்னணி நாடுகள் தடுப்பூசியை உருவாக்கி அதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அதாவது, உலகளவில் 5.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்ற இக்கொடூர தொற்றுநோயைச் சமாளிப்பதற்கான சிகிச்சைகளில் இதுவரை தடுப்பூசி முக்கிய பங்காற்றி வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு Gilead's infused antiviral remdesivir மற்றும் Generic steroid dexamethasone உள்ளிட்ட பிற மாத்திரைகள் மட்டுமே மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல் முறையாக வாய்வழி வைரஸ் தடுப்பு சிகிச்சை முறையான மாத்திரை களத்திற்கு வந்துள்ளது. இது தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு ஊக்கத்தை அளிக்கும் என நம்பப்படுகிறது.
மெர்க்ஸ் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெராபியூட்டிக்ஸ் இணைந்து covid-19 ஆன்டிவைரஸ் 'மால்னுபிரவிர்' என்ற மாத்திரையை உருவாக்கியுள்ளது. இந்த மாத்திரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்படுவதாகவும், உலக அளவில் முதல் முறையாக கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டு இந்த மாத்திரை கேம் சேஞ்சராக இருக்கும் என்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளதுடன், அதைத் தங்கள் நாட்டு மக்களின் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலானோர் ஊசி செலுத்தி கொள்ள விரும்புவதில்லை, ஆனால் மாத்திரையை எளிதில் விழுந்து விடுவார், அப்படிப்பட்டவர்களுக்கு இந்த மாத்திரை வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மாத்திரை அவசர பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என பிரிட்டன் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் வியாழக்கிழமை அனுமதி அளித்துள்ளது. அதேபோல் விரைவில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிறுவனத்தின் ஒப்புதல் பெற விண்ணப்பிக்கபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெர்க்கின் மால்னுபிராவிர் மாத்திரை நோயின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டால் வைரஸ் தொற்று தாக்கம் உடலில் கடுமையாவது தடுக்ப்படும் என்றும் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வாய்ப்பை அது பாதியாக குறைக்கும் என்றும், கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் அது உறுதி செய்யப்பட்டது என்றும் மெர்க்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் லாகோவ்ரியோ என பெயரிடப்பட்ட இந்த மருந்து covid-19 உருவாக்கும் வைரஸின் மரபணு குறியீட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானவுடன் அல்லது அறிகுறி தோன்றியவுடன் இந்த மாத்திரையை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தினம் இரண்டு வேளையாக எடுத்துக்கொள்ள வேண்டும், அப்போது இது உடலில் வைரஸ் தொற்று தீவிரம் அடையாமலும் நம்மை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க படாமலும் இது காக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மாத்திரையை குறித்து நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா வைரசின் அனைத்து வகைகளுக்கும் எதிராக குறிப்பாக புதிய வகையில் டெல்டா திரிபுக்கு எதிராகவும் இந்த மாத்திரை சிறப்பாக செயல்படுகிறது என மெர்க்ஸ் கூறியுள்ளது. எனவே இந்த மாத்திரையை தனது நாட்டில் விரைந்து பயன்படுத்த பிரிட்டன் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் கடந்த மாதம் சுகாதாரத்துறை அதிகாரிகள் 4 லட்சத்து 80 ஆயிரம் மெர்க்கின் மால்னுபிராவிர் மாத்திரைகளை தயாரித்து வழங்க மெர்கிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள, இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் சஜித் ஜாவித் தனது ட்விட்டர் பக்க பதிவில், எங்களது அரசாங்கம் தேசிய சுகாதார சேவை நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுகிறது, இந்த மாத்திரையை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில் மாத்திரை மக்களுக்கு வழங்கும் பணியை விரைவுபடுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
அதாவது பிரிட்டனில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பன்மடங்கு உயர்ந்து வருகிறது, கடந்த 7 நாட்களில் மட்டும் பிரிட்டனில் தினசரி சுமார் 40 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரிட்டன் மக்கள் தொகையில் ஐந்து மடங்கு அதிகமாக உள்ள அமெரிக்காவில் ஒரு நாளைக்கு தோராயமாக 74 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரிட்டனில் அதிக அளவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அந்நாட்டின் தென்மேற்கில் வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் முக கவசம், தடுப்பூசி, வீட்டில் இருந்து வேலை செய்ய உத்தரவு என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இங்கிலாந்தில் " திட்டம் B " செயல்படுத்துவதற்கான அழுத்தம் அரசாங்கத்திற்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தடுப்பூசியுடன், மாத்திரையும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ள நிலையில், இந்த மாத்திரை மிகப்பெரிய கேம் சேஞ்சராக அமையும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.