Omicron : ஒமைக்ரானை 70% கட்டுப்படுத்துகிறது ஃபைசர்… ஆய்வில் கிடைத்த நல்ல செய்தி!!

By Narendran SFirst Published Dec 14, 2021, 4:20 PM IST
Highlights

ஃபைசர் மருந்து ஒமைக்ரானை 70% கட்டுப்படுத்துவதாக தென்ஆப்பிரிக்கா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 

ஃபைசர் மருந்து ஒமைக்ரானை 70% கட்டுப்படுத்துவதாக தென்ஆப்பிரிக்கா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் உலகில் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த ஒமைக்ரான் வைரஸ், தடுப்பூசி மூலம் மனிதர்களுக்குக் கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்தும் தப்பிக்கும் தன்மை கொண்டவை என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஒமைக்ரான் வைரஸ் தொற்று மனிதர்களுக்கு லேசான பாதிப்பைத்தான் தரும், டெல்டா வைரஸ் போன்ற கொடூரமானது அல்ல என்று முதல்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், போதுமான தரவுகள் இல்லாததால், ஒமைக்ரான் வைரஸ் குறித்து வல்லுநர்களால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.  தற்போது உலக அளவில் புழக்கத்தில் இருக்கும் தடுப்பூசிகள் ஒமைக்ரான் வைரஸிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கும் என்று இதுவரை மருந்து நிறுவனங்களும் உறுதியாகத் தெரிவிக்கவில்லை. இதனால் ஒமைக்ரான் வைரஸை அழிக்கும் விதத்தில் தடுப்பூசிகளை மேம்படுத்தும் பணிகளை நிறுவனங்கள் செய்து வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவின் ஃபைஸர் பயோ என்டெக் நிறுவனங்கள் நடத்திய முதல்கட்ட ஆய்வில் 3 டோஸ் ஃபைஸர்-பயோ என்டெக் தடுப்பூசி செலுத்தினால், ஒமைக்ரான் வைரஸை அழிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும் எனத் தெரியவந்துள்ளது. இதில் 3-வது டோஸ் ஃபைஸர்-பயோ என்டெக் தடுப்பூசி செலுத்தும்போது, ஒமைக்ரான் வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். இது 2 டோஸ் தடுப்பூசி செலுத்தும்போது கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை விட அதிகமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளன. அதுமட்டுமல்லாமல் ஒமைக்ரான் வைரஸால் மனிதர்கள் உடலில் 3 வது டோஸ் தடுப்பூசி மூலம் உருவாகிய சிடி8+ டி செல்கள் அதிகமாக பாதிக்கப்படவில்லை. ஆனால், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தும் பட்சத்தில் பாதுகாப்பு இருப்பதைவிட கூடுதலாக 3-வது டோஸில் கிடைக்கும். 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி ஒரு மாதம் இடைவெளியில் ஒருவர் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளும், 3 டோஸ் செலுத்தி அதன்பின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளும் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. இதில் 3 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருந்தது.

அவர்கள் உடலில் இருந்த நோய் எதிர்ப்பு சக்தி ஒமைக்ரான் வைரஸை அழிக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசிகள் மூலம் மனிதர்கள் உடலில் உருவாகும் டி செல்கள் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்படவில்லை. அதனால்தான் தடுப்பூசி செலுத்தியவர்கள் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பைப் பெறுகிறார்கள். இருப்பினும் உலக அளவில் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என ஃபைஸர்-பயோ என்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஒமைக்ரானால் மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவு பாதிப்பு ஏற்படாமல் பைசர் மருந்து 70% தடுப்பதாக தென்ஆப்பிரிக்கா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தென்ஆப்பிரிக்காவில் மீண்டும் தொற்று ஏற்பட ஒமைக்ரான் 90% காரணமாக உள்ள நிலையில் இதனை தடுக்கும் மருந்தாக பைசர் தடுப்பூசி உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

click me!