
பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னை அங்கு கைவிட்டுவிட்டு, ரகசியமாக டெல்லியில் இரண்டாவது திருமணம் செய்ய தனது கணவர் திட்டமிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். நிகிதா நாக்தேவ் என்ற அந்தப் பெண், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வீடியோ மூலம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தப் பிரச்சனை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கராச்சியைச் சேர்ந்த நிகிதா, நீண்ட கால விசா மூலம் இந்தியாவின் இந்தூரில் வசித்து வந்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த விக்ரம் நாக்தேவ் என்பவரை, 2020 ஜனவரி 26 அன்று கராச்சியில் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்த ஒரு மாதம் கழித்து, 2020 பிப்ரவரி 26 அன்று விக்ரம் அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்தார். ஆனால், சில மாதங்களிலேயே தனது வாழ்க்கை துன்பகரமாக மாறியதாக நிகிதா குற்றம் சாட்டுகிறார்.
2020 ஜூலை 9 அன்று, விசா தொழில்நுட்பக் கோளாறு என்ற பொய்யான காரணத்தைக் கூறி, தனது கணவர் தன்னை அட்டாரி எல்லையில் விட்டுவிட்டார். அங்கிருந்து தான் கட்டாயமாகப் பாகிஸ்தானுக்குத் திருப்ப அனுப்பப்பட்டதாக அவர் கூறுகிறார். அதன் பிறகு கணவர் தன்னை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துக்கொள்வதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கராச்சியில் இருந்து நிகிதா வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான வீடியோவில், "நான் அவரை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லுதாறு மீண்டும் மீண்டும் கோரினேன், ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் மறுத்துவிட்டார். இன்று எனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், பெண்கள் இந்த அமைப்பின் மீதான நம்பிக்கையை இழந்துவிடுவார்கள். பல பெண்கள் தங்களது திருமண வாழ்வில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர். நான் உங்கள் அனைவரையும் எனக்கு ஆதரவாக நிற்கும்படி கேட்டுக்கொள்கிறேன்," என்று கண்ணீருடன் முறையிட்டுள்ளார்.
திருமணமான உடனேயே தனது கணவர் மற்றும் மாமனார்-மாமியாரின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதாகவும் நிகிதா குற்றம் சாட்டுகிறார். தனது கணவர் தனது உறவினர் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததாகவும், இது குறித்து மாமனாரிடம் முறையிட்டபோது, அவர், "ஆண்கள் இப்படித்தான் பழகுவார்கள், இதில் எதுவும் செய்ய முடியாது" என்று அலட்சியமாகப் பேசியதாகவும் நிகிதா கூறியுள்ளார்.
சட்டப்பூர்வமாகத் திருமணம் நடந்த நிலையில், தன்னை நிராகரித்துவிட்டு விக்ரம் டெல்லியில் இரண்டாவது திருமணத்திற்குத் தயாராவதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர், 2025 ஜனவரி 27 அன்று எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.
"ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்தியாவில் நீதி கிடைக்க வேண்டும்" என்றும் நிகிதா வலியுறுத்தியுள்ளார்.
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிந்தி பஞ்ச் மத்தியஸ்தம் மற்றும் சட்ட ஆலோசனை மையம் இந்த வழக்கை எடுத்து விசாரித்தது. விக்ரமுக்கும், அவர் திருமணம் செய்யத் திட்டமிட்ட பெண்ணுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இருப்பினும், சமரச முயற்சிகள் தோல்வியடைந்தன. சென்ற ஏப்ரல் 30ஆம் தேதி வெளியான இந்த வழக்கின் இறுதி அறிக்கையில், நிகிதா அல்லது விக்ரம் ஆகிய இருவரில் எவரும் இந்தியக் குடிமக்கள் இல்லை என்பதால், இந்த விவகாரம் பாகிஸ்தானின் அதிகார வரம்பிற்குள் வருகிறது என்று முடிவு அறிவிக்கப்பட்டது. மேலும், விக்ரமை பாகிஸ்தானுக்கு நாடுகடத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.
மே 2025-இல், நிகிதா இந்தூர் சமூகப் பஞ்சாயத்தை அணுகியபோதும், அங்கும் விக்ரமை நாடுகடத்தவே பரிந்துரைக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தூர் ஆட்சியர் ஆஷிஷ் சிங் உறுதி அளித்துள்ளார்.