காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் தொடர்ந்து எழுப்பும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதியன்று மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக இருக்கும் என்றும், சட்டப் பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த வகையில், மூன்று விதமான தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கினர். மூன்று விதமான தீர்ப்பு வழங்கப்பட்டாலும், ஒரே தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார். அதன்படி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது சட்டப்பிரிவை நீக்கியது செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில், காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் தொடர்ந்து எழுப்பும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். “ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் மூலம் சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது. இந்திய உச்ச நீதிமன்றம் மில்லியன் கணக்கான காஷ்மீரிகளின் தியாகத்திற்கு துரோகம் இழைத்துள்ளது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் இந்த பாரபட்சமான தீர்ப்பால், காஷ்மீரின் சுதந்திர போராட்டம் வலுவடையும். காஷ்மீர் போராட்டத்தில் எந்தக் குறைவும் இருக்காது.” என அவர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் பறிப்பு: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கொடும் அநீதி - சீமான்!
நவாஸ் ஷெரீப்பின் தலைமையில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியானது காஷ்மீரிகளின் உரிமைகள் பிரச்சனையை அனைத்து மட்டங்களிலும் எழுப்பும் என்றும் ஷெபாஸ் ஷெரீப் கூறினார். இந்தப் போராட்டத்தில் எங்கள் காஷ்மீரி சகோதர சகோதரிகளுக்கு நாங்கள் துணை நிற்கிறோம் எனவும் அவர் திட்டவட்டம் தெரிவித்தார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் பூட்டோ சர்தாரி கூறுகையில், சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐநா தீர்மானங்களை இந்தியா பின்பற்றுவதில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. சர்வதேச ஒப்பந்தங்களை இந்திய நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றங்கள் மாற்றி எழுத முடியாது என்றார்.
அதேபோல், இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவது குறித்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த 9ஆம் தேதியன்று பேசியிருந்தார். “நான் பிரதமராக இருந்தபோது, பாஜ்பாய், மோடி ஆகிய இரண்டு இந்தியப் பிரதமர்கள் பாகிஸ்தானுக்கு வந்துள்ளனர். இந்தியாவுடனான நமது உறவை மேம்படுத்த வேண்டும்,” என அவர் கூறியிருந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் காபந்து அரசாங்கத்தின் கீழ் பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. அந்த அரசின் 18 பேர் அமைச்சர்களாக உள்ளனர். அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை இந்த காபந்து அரசாங்கம் தொடரும். நாட்டின் தற்காலிக பிரதமர் அன்வர் உல் ஹக் காக்கர் என்பவர் உள்ளார்.