
பரிசுப் பொருட்கள் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு சென்றிருந்த நேரத்தில் சமன் பார்க்கில் இருக்கும் அவரது வீட்டுக்குள் நுழைந்த 10,000 போலீசார் அவரது ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்தனர். இதனால், பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இம்ரான் கான் வீடு முன்பு அவரது பாகிஸ்தான் தேரிக் இன்சாஃப் கட்சி அமைத்து இருந்த தடுப்பை நீக்கிவிட்டு அவரது வீட்டுக்குள் போலீசார் நுழைந்தனர். அங்கு அமைக்கப்பட்டு இருந்த அனைத்து முகாம்களையும் நீக்கினர். இம்ரான் கானை கைதில் இருந்து காப்பாற்றுவதற்காக இந்த முகாம்களை அவரது ஆதரவாளர்கள் அமைத்து தங்கி இருந்தனர். மேலும், வீட்டுக்குள் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள், இரும்புத் தடிகளை வைத்து இருந்தனர். வீட்டின் மேல் இருந்து போலீசார் நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தினர். போலீசாருக்கும், இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் பத்து பேர் காயம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போரில் நாடுகடத்தப்பட்ட குழந்தைகள்.. ரஷ்ய அதிபருக்கு எதிராக வாரண்ட் - விரைவில் கைதாகிறாரா புடின்.?
பஞ்சாப் காபந்து அரசின் தகவல்துறை அமைச்சர் அமிர் மிர் கூறுகையில், ''சமன் பார்க் பகுதியில் இருப்பவர்களை அப்புறப்படுத்துவதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் யாரும் செல்லக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்பினர் அங்கு இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீசார் வாரன்ட் வைத்திருக்கின்றனர். இதையடுத்தே இம்ரான் கான் வீட்டிற்குள் நுழைந்தனர்'' என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இதற்கு இம்ரான் கான் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு வெளியேறிய நேரத்தில் போலீசார் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும், தனது மனைவி புஷ்ரா பேகம் தனியாக வீட்டில் இருப்பதாகவும், எந்த சட்டத்தின் கீழ் இதையெல்லாம் செய்கிறார்கள் என்றும் இம்ரான் கான் டுவிட்டரில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மேலும் அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், ''என்னை சிறையில் அடைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டனர். அதன் பின்னர் தேர்தல் நடத்த வேண்டும் என்று நினைக்கின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன. தோஷகானா என்பது பாகிஸ்தான் நாட்டின் ஆட்சியாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், அரசின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் பரிசுகளை பாதுகாக்கும் இடம். இவர்கள் வாங்கும் பொருட்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது. இங்கு வைத்து விட வேண்டும். இது 1974ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு, அமைச்சரவையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அப்படிப்பட்ட பரிசுப் பொருட்கள் நிறைந்த கருவூலத்தில் இருந்து குறைந்த விலைக்கு வாட்ச் உள்பட பரிசுப் பொருட்களை இம்ரான் கான் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று இருப்பது தொடர்பான ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆஜராவதற்குத் தான் இன்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் சென்று இருக்கிறார்.
இம்ரான் கான் இன்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராவதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை இரவு தலைநகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. தனியார் நிறுவனங்கள், பாதுகாவலர்கள் அல்லது தனிநபர்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. வாகனம் ஓட்டும் போது ஓட்டுநர்கள் தங்களது வாகனப் பதிவு ஆவணங்களை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.