
பாகிஸ்தான் வரும் வாரத்தில் ஏவுகணை சோதனை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவுடனான பதற்றத்தை அதிகரித்துள்ளது.
பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதிலிருந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பகைமை கணிசமாக அதிகரித்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் தினசரி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. பாகிஸ்தானுக்கு அளிக்க வேண்டிய சர்வதேச நிதியை நிறுத்த வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் மீது இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கை
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு இந்திய விசாக்களை நிறுத்தி வைப்பது, பாகிஸ்தான் உயர் கமிஷனில் பணியாற்றும் பணியாளர்களை குறைப்பது, அட்டாரி எல்லையை மூடுதல், பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறப்பதற்கு தடை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எல்லையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை
பாகிஸ்தான் ஏவுகணைகளை சோதிக்கத் தயாராகி வருவதாக ANI செய்தி தெரிவிக்கிறது. இது பாகிஸ்தானின் "முரட்டுத்தனமான செயல் மற்றும் இந்தியாவுக்கு எதிரான பகைமை பிரச்சாரத்தை அதிகரிக்கிறது'' என்று கருதப்படுகிறது. இந்த திட்டமிட்ட ஏவுகணை சோதனை "இந்தியாவுடனான பதற்றத்தை அதிகரிப்பதற்கான ஒரு முயற்சி" என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அறிவிப்புடன் நிற்கும் பாகிஸ்தானின் ஏவுகணை சோதனை
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஏப்ரல் 23 அன்று இரவு பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தபோவதாக அறிவித்து இருந்தது. ஆனால், அதுமாதிரி சோதனை எதுவும் நடத்தவில்லை. அதன்பிறகு ஏப்ரல் 26-27 தேதிகளில் கராச்சி கடற்கரையில் பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் சோதனை நடத்துவதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இருப்பினும், எந்த சோதனையும் நடத்தப்படவில்லை. இரண்டு முயற்சிகளுக்குப் பிறகு, ஏப்ரல் 30 - மே 2 தேதிகளில் இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு அருகில் சோதனை நடத்துவதற்கு பாகிஸ்தான் மூன்றாவது முயற்சியை மேற்கொண்டது, ஆனால் மீண்டும் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை.
ஜம்மு காஷ்மீரில் எல்லையில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாலும், பாகிஸ்தான் அரசியல்வாதிகள் ஆபத்தான முறையில் பதற்றத்தை அதிகரிப்பதாலும், பாகிஸ்தானின் இந்த நான்காவது ஏவுகணை சோதனை திட்டம் இந்தியாவுடனான பதற்றத்தை வியத்தகு முறையில் அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது.