
பாகிஸ்தான் தனது 'ஃபதா' (Fatah) ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. இது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நடந்துள்ள இரண்டாவது ஏவுகணை சோதனை ஆகும்.
120 கி.மீ. தொலைவு கொண்ட இந்த ஏவுகணை, தற்போது நடந்துவரும் சிந்து ராணுவப் ஒத்திகையின் ஒரு பகுதியாக ஏவப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை சோதனை துருப்புக்களின் தயார்நிலையை உறுதி செய்வதையும், ஏவுகணையின் தொழில்நுட்ப அம்சங்களைச் சரிபார்ப்பதையும் நோக்கமாகக் கொண்டது என்று பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) தெரிவித்துள்ளது.
இந்த சோதனைக்கு முன்னதாக சனிக்கிழமையன்று அப்தாலி ஏவுகணை ஏவப்பட்டது. இது 450 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா ஆகியோர் இந்த சோதனைக்காக ISPR க்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்வதற்கான தயார்நிலையை உறுதி செய்வதில் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்காக முப்படைகளின் தயார்நிலை மற்றும் தொழில்நுட்பத் திறமையை நிருபிக்கும் வகையில் ஏவுகணை சோதனை அமைந்துள்ளது எனவும் பாகிஸ்தான் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் சமீபத்திய ஏவுகணை சோதனை, 26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் நடந்த இரண்டாவது சோதனை ஆகும். இருநாட்டு உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
பதில் நடவடிக்கைகள்:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, அட்டாரி எல்லையை மூடுவது, அனைத்து பாகிஸ்தான் விமானங்களும் இந்திய வான்வெளியில் பறக்கத் தடை, சர்வதேச வர்த்தக பாதைகள் துண்டிப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னர், பாகிஸ்தான் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க தடைவிதிப்பதாக அறிவித்துள்ளது. அரபிக் கடலில் தீவிரமான கடற்படைப் பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (LoC) பகுதியில் அடிக்கடி துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.