டுபாக்கூர் வேலையால் உலக அளவில் அசிங்கப்படும் பாகிஸ்தான்..!! உள்ளே வராதே என விரட்டியடித்த அமெரிக்கா..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 10, 2020, 4:26 PM IST
Highlights

அதன் மூன்றில் ஒரு பங்கு விமானிகள் ஓட்டுனர் உரிமம் பெற தவறான தகவல்களையும், அவர்களின் தகுதிகள் தொடர்பாக போலி ஆவணங்களையும் சமர்பித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் அல்லது பிஐஏவின் சிறப்பு விமானங்கள் அமெரிக்காவிற்கு வருவதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் விமான சேவையில் பணியாற்றும் விமானிகள், விமான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முறைகேடான வழியை பின்பற்றியதை பாகிஸ்தான் அரசு சமீபத்தில் கண்டறிந்ததையடுத்து அமெரிக்க போக்குவரத்து அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த மே மாதம் கராச்சியில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 97 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் முதற்கட்ட அறிக்கையில், விபத்துக்கு விமானிகளே காரணம் என்றும் அவர்கள் கட்டுப்பாடு இன்றி விமானத்தை இயக்கியதே காரணம் என்றும் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் குலாம் சர்வார் கான் நாடாளுமன்றத்தில் பேசுகையில், விமானிகள் நெறிமுறையைப் பின்பற்றவில்லை என்றும், உலகளாவிய கொரோனா தொற்றுநோய் குறித்து விமானியும் இணை விமானியும் உரையாடிக் கொண்டே விமானத்தை இயக்கியதால் இதில் விமானிகளின் கவனம் திசை திரும்பியதாவும் கூறினார். 

ஏராளமான தொழில்முறை விமானிகள் மோசடி உரிமங்களை வைத்திருக்கிறார்கள் அல்லது அவர்கள் தேர்வுகளில் முறைகேடு செய்துள்ளார்கள் என ஆதங்கம் தெரிவித்தார். சுமார் 860 விமானிகளில் 260 க்கும் மேற்பட்டவர்கள் போலி உரிமங்களை வைத்திருப்பதாகவும், அவர்கள் தேர்வுகளில் மோசடி செய்துள்ளனர் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் குலாம் சர்வார் கான் கூறினார். இதனையடுத்து உலகளாவிய விமான நிறுவனமான ஐ.ஏ.டி.ஏ, பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனங்களின் விமானிகள் ஒட்டுனர் உரிமங்களை முறைகேடாக பெற்றிருப்பது பாதுகாப்புக்கு விடப்பட்டுள்ள மிகப்பெரும் சவால் என்று எச்சரித்துள்ளதுடன், கடந்த வாரம் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 262 விமான விமானிகளை நீக்குவதாக அறிவித்தது. அதேசமயம், ஐரோப்பிய ஒன்றியத்தின் விமான போக்குவரத்து ஆணையம் போலி உரிமம் வழக்கில் 32 உறுப்பு நாடுகளுக்கு இதுபோன்ற விமானிகளின் சேவைகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, கடந்த மாதம் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட விசாரணையில், அதன் மூன்றில் ஒரு பங்கு விமானிகள் ஓட்டுனர் உரிமம் பெற தவறான தகவல்களையும், அவர்களின் தகுதிகள் தொடர்பாக போலி ஆவணங்களையும் சமர்பித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் செயல்பாட்டை ஆறு மாதங்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய விமான பாதுகாப்பு அமைப்பும் நிறுத்தியுள்ளது. இருப்பினும், இது தொடர்பாக பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் அல்லது பிஐஏவின் சிறப்பு விமானங்கள் அமெரிக்காவிற்கு வருவதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இது சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு பின்னடைவையும் பெருத்த அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி நிறுவனமான ஜியோ நியூஸ், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், விமான நிறுவனங்களுக்குள் நடந்து வரும் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது, ஆனால் இதுவரை அரசு தரப்பில் இருந்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது. 
 

click me!