கிழக்கு லடாக் பகுதியில் சீன எடுத்த ஆக்ரோஷமான நடவடிக்கைகளுக்கு இந்தியா சிறப்பாக எதிர்வினையாற்றியது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ இந்தியாவை வெகுவாக பாராட்டியுள்ளார்.
கிழக்கு லடாக் பகுதியில் சீனா எடுத்த ஆக்ரோஷமான நடவடிக்கைகளுக்கு இந்தியா சிறப்பாக எதிர்வினையாற்றியது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ இந்தியாவை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லையில் பதற்றம் ஏற்பட்டபோது தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் தான் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்தியா-சீனா இடையே கிழக்கு லடாக் பகுதியில் கடந்த எட்டு வாரங்களுக்கும் மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த மே மாதம்-21 தேதி பாங்கொங் த்சோ பகுதியில் இரு நாட்டு படை வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து எல்லையில் பதற்றம் அதிகரித்தது. இதனை அடுத்து இருநாடுகளும் படைகளை குவித்து எல்லையில் முகாமிட்டிருந்த நிலையில், ஜூன் 15ஆம் தேதி இரவு சீன ராணுவத்தினர் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து நடத்திய வன்முறை தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 45 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழப்பு ஏற்பட்டது உண்மைதான் என ஒப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை கூற மறுத்துவிட்டது.
இதனையடுத்து இரண்டு தரப்புக்கும் இடையே பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், இந்திய ராணுவ தளபதி லே பகுதிக்கு சென்று கள நிலைமைகளை ஆய்வு செய்தார், ஒருபுறம் பதற்றம் நீடித்தாலும் மறுபுறம் இருநாட்டு ராணுவ தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த மாதம்- 22 ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் பதற்றம் நிறைந்த பகுதியிலிருந்து படைகளை விலக்கிக்கொள்ள இரு தரப்பும் சம்மதம் தெரிவித்தன பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த 30ஆம் தேதியும் ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையிலும் இரு தரப்பினரும் மோதலை கைவிட்டு எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இந்திய பிரதமர் மோடி திடீரென எல்லைக்கு விரைந்ததுடன் அங்கு ராணுவ வீரர்களை சந்தித்து நம்பிக்கை ஊட்டும் வகையில் வீர உரையாற்றினார். அப்போது அவர் ஆக்கிரமிப்புகான சகாப்தம் முடிந்துவிட்டது, இது வளர்ச்சிக்கான நேரம் என சீனாவை எச்சரித்தார். மேலும் இந்தியா ஒரு அங்குலம் கூட எல்லையிலிருந்து பின்வாங்குவது என்றும், எந்த நிலைமையையும் எதிர்கொள்ள நாடு தயாராக இருக்கிறது எனவும் அவரின் பேச்சு அமைந்திருந்தது. அதைத்தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் எல்லையில் நிலைமையை கட்டுப்படுத்தவும், படைகளைப் பின் வாங்கவும் ஒப்புக்கொண்டனர்.
எல்லையில் அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டும் வகையில் அனைத்து நிலைகளில் இருந்தும் படைகளை திரும்பப் பெறுவது என இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது, இந்நிலையில் எல்லையிலிருந்து சீனா தனது படைகளை பின்வாங்கியுள்ளது, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பேட்ரோல் பாயிண்ட்-15ல் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு இந்திய-சீன படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா அந்த பகுதியில் உருவாக்கியிருந்த கூடாரங்கள் மற்றும் ஹெலிபேட் போன்ற கட்டமைப்புகளும் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன, பாங்கொங் த்சோ ஏரிக்கு அருகில் உள்ள விரல் 4, ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா ஆகிய பகுதிகளில் இருந்தும் சீனா தனது படைகளை திரும்பப் பெற்றுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோவிடத்தில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நிலைமை குறித்து கேட்டதற்கு, இந்தியா-சீனா விவகாரம் குறித்து பலமுறை நான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் பேசியுள்ளேன். சீனர்கள் நம்பமுடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் அதற்கு இந்தியர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளனர்.
ஜூன்-15க்கு பிறகு இந்தியா-சீனா இடையே பதற்றம் அதிகரித்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் அழைத்து பேசினேன். அவரிடம் அப்போதய நிலவரத்தையும் கேட்டு தெரிந்து கொண்டேன். சீன எடுத்த ஆக்ரோஷமான நடவடிக்கைகளுக்கு இந்தியா சிறப்பாக எதிர்வினையாற்றியது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜீ ஜின்பிங்கின் நடத்தை உலகம் முழுவதும் கேள்விக்குறியாகியுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆக்கிரமிப்பின் நிகழ்வுகளை ஜி ஜின்பிங் கிடமிருந்து பிரித்து பார்க்க முடியாது. இதை நாம் சாதாரணமாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது, சீன கம்யூனிஸ்ட் கட்சி உலகில் எல்லா பக்கத்திலும் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டு வருகிறது. சீனா இறையாண்மையை மதிக்கும் நாடு என்று சொல்லும் வகையில் ஒரு நாடுகூட இல்லை. சீனாவின் இந்த அத்துமீறல் நடவடிக்கையை உலகமே ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். சீனாவின் இந்த நடவடிக்கையை உலகம் இனி வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இனியும் இதனை தொடர அனுமதிக்க முடியாது என அவர் எச்சரித்துள்ளார்.