
பாகிஸ்தானின் ராணுவ மக்கள் தொடர்புப் பிரிவின் (ISPR) தலைமை இயக்குநர், லெப்டினன்ட் ஜெனரல் அஹ்மத் ஷெரீஃப் சௌத்ரி, ஒரு பெண் பத்திரிகையாளரைப் பார்த்து கண் சிமிட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சௌத்ரி தனது சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பல் பேசியபோது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியவர் என்றும், அரசிற்கு எதிரானவர் என்றும் குற்றம் சாட்டினார். இந்தியாவின் கைப்பாவையாகச் செயல்படுகிறார் என்று அவர் சாடினார்.
இது குறித்து கேள்வியெழுப்பிய பத்திரிகையாளர் அப்சா கோமல், “கடந்த காலத்தில் இருந்து இப்போது என்ன வேறுபாடு இருக்கிறது. அல்லது எதிர்காலத்தில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்க வேண்டுமா?” எனக் கேட்டார்.
இதற்கு பதிலளித்த சௌத்ரி, கேலியான தொனியில், “அவர் ஒரு 'ஜெஹ்னி மாரீஸ்' (மன நோயாளி),” என்று கூறிவிட்டு, சிரித்துக்கொண்டே கோமலைப் பார்த்து கண் சிமிட்டினார்.
இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் கோபத்தைத் தூண்டியுள்ளது.
“சீருடையில் உள்ள ஒருவர் எப்படி இப்படி பகிரங்கமாகக் கண் சிமிட்ட முடியும்?” என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார். இன்னொரு பயனர், “இவர் பாகிஸ்தான் ராணுவத்தின் ஜெனரல்... அவர்கள் இப்படி இருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை,” என்று குறிப்பிட்டார்.
சௌத்ரி சமீபத்திய மாதங்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய முகமாக இருந்து வருகிறார். செய்தியாளர் சந்திப்புகளில் இந்தியாவுக்கு எதிராகப் பேசுவதில் பெயர் பெற்றவர்.
இப்போது அவர் இம்ரான் கான் மீதான தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில், இந்தப் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
லெப்டினன்ட் ஜெனரல் சௌத்ரியின் பின்னணியும் இப்போது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது; அவர், ஓசாமா பின்லேடனின் உதவியாளராக இருந்தவரும், அறிவிக்கப்பட்ட பயங்கரவாதியுமான சுல்தான் பஷிருதீன் மஹ்மூத்தின் மகன் ஆவார்.
இந்தக் கண் சிமிட்டும் சம்பவம், ராணுவத்தின் உயர்மட்டப் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளின் தொழில்முறைக் கண்ணியம் குறித்து பாகிஸ்தானில் பொது விவாதத்தைத் தூண்டியுள்ளது.