
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் முற்றி வரும் நிலையில் இந்தியாவுக்கு அமெரிக்கா 131 மில்லியன் டாலர் அளவிலான ராணுவ ஹார்டுவேர் வழங்குவதற்கு முன் வந்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்தியா தடை விதித்து இருப்பதைப் போல பாகிஸ்தானும் இந்திய விமானங்களுக்கு தடை வித்தித்துள்ளது. எந்த நேரத்திலும், பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
டிரம்ப், ஜேடி வான்ஸ் கண்டனம்:
இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுடன் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் மீது இந்தியா தொடுக்கும் தாக்குதல் பிராந்தியத்தில் எந்த வகையிலும் பெரிய தாக்குதலை ஏற்படுத்தக் கூடாது என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் ஜேடி வான்ஸ் பஹல்காம் தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளனர்.
இந்தோ பசிபிக் திட்டத்தின் கீழ் இந்திய கடல் பாதுகாக்கப்படும்
இந்த நிலையில், அமெரிக்காவின் பென்டகனின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் (DSCA) இந்தியாவுக்கு ராணுவ ஹார்டுவேர் வழங்குவதற்கு தேவையான சான்றிதழை வழங்கியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. "இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கும் ராணுவ ஹார்டுவேர் மூலம் கடல்சார் கள விழிப்புணர்வு, பகுப்பாய்வு திறன்களை மேம்படுத்தி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனை வளர்க்க முடியும். அமெரிக்காவிடம் இருந்து இந்தியா அதிகமான ராணுவ தளவாடங்களை வாங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்புகிறார். இந்தோ பசிபிக் கடல்சார் விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் அமெரிக்காவிடம் இருந்து இந்த ஹார்டுவேர் தொழில்நுட்பத்தை இந்தியா வாங்கும். இந்த திட்டத்தின் கீழ் கடல்சார் பகுதிகளில் இந்தியாவுக்கு அமெரிக்கா பாதுகாப்பு கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
ராணுவ ஆதரவு ஹார்டுவேர் என்றால் என்ன?
அமெரிக்க அரசாங்கத்தின் அறிக்கையின்படி, "இந்தோ-பசிபிக் கடல்சார் விழிப்புணர்வு மற்றும் தொடர்புடைய உபகரணங்களை இந்தியாவிற்கு சுமார் 131 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்ய வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் கண்காணிப்புக்கான உபகரணங்களை அமெரிக்கா இந்தியாவிற்கு விற்பனை செய்யும். அமெரிக்காவின் கூற்றுப்படி, "சீ-விஷன் மென்பொருள்", "ரிமோட் மென்பொருள்" ஆகியவற்றை வாங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. சீ-விஷன் மென்பொருள் என்பது கடலில் கப்பல்கள் மற்றும் பிற செயல்பாடுகளை கண்காணிக்க உதவும் ஒரு அமைப்பாகும்.
பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை: துருக்கி மறுப்பு
சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு துருக்கி ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவதாக செய்திகள் வந்தன. ராணுவ உபகரணங்களுடன் துருக்கியின் C-130E ஹெர்குலஸ் விமானம் கராச்சியில் தரையிறங்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. சில ஊடகங்கள் சுமார் ஆறு C-130E விமானங்கள் பாகிஸ்தானில் தரையிறங்கியதாகக் கூட செய்திகள் வெளியிட்டு இருந்தன. இருப்பினும், இந்த செய்திகளை துருக்கி மறுத்துள்ளது. துருக்கி சரக்கு விமானம் பாகிஸ்தானில் எரிபொருள் நிரப்புவதற்காக மட்டுமே தரையிறங்கியதாக துருக்கி அதிபர் அலுவலகத்தின் தகவல் தொடர்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.