தென் கிழக்கு குவாசுலு நேட்டல் பிராவின்ஸ் பகுதிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
தென் ஆப்ரிக்காவில் தொடர் கனமழை காரணமாக வரலாறு காணாத வகையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை தாக்கிய புயல் காரணமாக இதுவரை சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே தென் ஆப்ரிக்காவில் அடிக்கடி இயற்கை பேரிடர்கள், நோய் தொற்று என பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததை அடுத்து, தற்போது மழை வெள்ளம் காரணமாக அந்த நாடு மற்றும் ஓர் பேரிடரை எதிர்கொண்டு வருகிறது.
புயல்:
தென் ஆப்ரிக்காவின் தென் கிழக்கு கடற்கரை நகரான டர்பன் முழுக்க வெள்ள நீர் அடித்து சென்றதில் சாலைகள் பலத்த சேதம் அடைந்தன. மேலும் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளை வெள்ளம் அடித்து சென்றது. இதில் பலர் சிக்கி உயிரிழந்தனர். உயிர்தப்பியவர்கள் தங்குவதற்கு வீடின்றி தவித்து வருகின்றனர்.
இந்திய பெருங்கடல் பகுதியை ஒட்டிய தென் கிழக்கு குவாசுலு நேட்டல் பிராவின்ஸ் பகுதிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி பலர் ஒன்று கூடி கொண்டாட இருந்த நிலையில், வெள்ள பாதிப்பு காரணமாக தற்போது மீட்பு பணிகளால் அந்த பகுதி முழுக்க கலையிழந்து காணப்படுகிறது.
அதிகரிக்கும் உயிரிழப்பு:
தற்போதைய தகவல்களின் படி வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை சரியாக 398 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் 27 பேர் தொடர்ந்து மாயமாகி இருக்கின்றனர். இவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ள பாதிப்பு காரணமாக சுமார் 40 ஆயிரம் பேர் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர்.
"ஊரக பகுதிகளில் இடிந்து விழுந்த வீடுகளின் இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருவது மேலும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து சேதங்களும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வரும் பகுதிகளில் பாதிப்பு மேலும் தீவிரம் அடையும் என்றே தெரிகிறது." என மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நெட்கேர் 911 எனும் நிறுவனம் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து உள்ளது.
ரக்பி ரத்து:
தொடர் மழை காரணமாக உள்ளூர் பிரீமியர் லீக் கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் கரி கப் ரக்பி போட்டியும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. வெள்ள பாதிப்பில் சிக்கித் தவிப்போருக்கு மரியாதை செலுத்தும் விதமாக போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மீட்பு பணிகளில் போலீஸ், ராணுவம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தோர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.