
இங்கிலாந்தின் கார்ன்வால் பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவிலிருந்து காணாமல் போன ஃபிராங்கி என்ற இளம் ஃபிளமிங்கோ பறவை, ஆறு நாள் தீவிர தேடலுக்குப் பிறகு பிரான்சின் கடற்கரையில் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிறந்து சில மாதங்களே ஆன இந்தச் சின்னஞ் சிறிய பறவை, சுமார் 200 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பறந்து சென்று சாகசம் புரிந்துள்ளது, அதன் பராமரிப்பாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சிறகு கிளிப் செய்யப்பட்டும் தப்பிய அதிசயம்
கார்ன்வாலில் உள்ள பாரடைஸ் பார்க் வனவிலங்கு சரணாலயத்தில் பிறந்த கரீபியன் இனத்தைச் சேர்ந்த ஃபிளமிங்கோ குஞ்சுதான் ஃபிராங்கி. பிறந்து நான்கு மாதங்களே ஆனதால், அது பறக்க முடியாதபடி அதன் ஒரு சிறகு கிளிப் (Clipping) செய்யப்பட்டிருந்தது. ஆனால், நவம்பர் 2-ஆம் தேதி காலை 8 மணியளவில், திடீரென அது தனது கூட்டத்திலிருந்து காணாமல் போனது.
சரணாலயத்தின் கண்காணிப்பாளர் டேவிட் வூல்காக் கூறுகையில், "அது ஒரு இளம் பறவை என்பதால், இவ்வளவு விரைவாக பிரான்சுக்குச் சென்றது எங்களை ஆச்சரியப்படுத்தியது. ஆனால், அது அங்கே நன்றாக இரை தேடுகிறது, தனது சிறகுகளைச் சீர்செய்கிறது, பார்க்கப்போனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான இளம் பறவைகளைப் போலவே, ஃபிளமிங்கோக்களும் தாவிக்குதித்து சிறகுகளைப் பழக்கப்படுத்திக்கொள்ளும். "அப்படி அது தாவிக்குதிக்கும்போது, திடீரென பலத்த காற்று வீசியிருக்கலாம். அது ஃபாங்கியை இழுத்துச் சென்று, அது மேலே கிளம்பிவிட்டது என்று சந்தேகிக்கிறேன்" என்று டேவிட் வூல்காக் கூறுகிறார்.
ஒரு பறவையின் சிறகைக் கிளிப் செய்வது, அது தரையில் இருந்து பறப்பதைத் தடுக்குமே தவிர, காற்றில் ஏறிய பிறகு தொடர்ந்து பறப்பதைத் தடுக்காது என்றும் அவர் விளக்கினார்.
ஃபாங்கியைத் தேட சரணாலய ஊழியர்கள் உள்ளூர் ஊடகங்கள் மூலம் பொதுமக்களின் உதவியை நாடினர். "ஃபிளமிங்கோவைக் கண்டுபிடித்துவிட்டோம் என்று மக்கள் தொடர்ந்து அழைத்தனர், ஆனால் நாங்கள் அங்கே சென்று பார்த்தால் அது வெள்ளை நாரையாக இருந்தது," என்று வூல்காக் கூறுகிறார்.
ஃபாங்கி அட்லாண்டிக் கடலில் வெகுதூரம் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று சரணாலய ஊழியர்கள் கவலைப்பட்டனர்.
நவம்பர் 9 அன்று பிரெஞ்சு அறிவியல் இணையதளம் ஒன்று பிரான்சின் வடக்குக் கடற்கரையில் உள்ள இலே அகன்டன் (Île Aganton) தீவில் ஒரு ஃபிளமிங்கோ படத்தைப் பதிவிட்டது. அதன் பிறகு, அங்கிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிளேஜ் டி கெரெம்மா (Plage de Keremma) கடற்கரையில் ஃபிளமிங்கோவின் இரண்டு படங்கள் சரணாலயத்திற்கு அனுப்பப்பட்டன. அந்தப் பறவையின் வலது சிறகு கிளிப் செய்யப்பட்டிருந்ததை வைத்து அது ஃபிராங்கிதான் என்பது உறுதியானது.
நவம்பர் 3 அன்று காலை 10 மணியிலிருந்து ஒரு நாளுக்கும் குறைவான நேரத்தில் ஃபிராங்கி பிரான்சை அடைந்திருக்கலாம் என்று அறியப்படுகிறது.
தற்போது ஃபிராங்கி பிரான்சில் இருப்பதால், அதை மீண்டும் அழைத்து வருவது சாத்தியமில்லை என்று சரணாலயம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் (UK) வெளியேறியதால், இங்கிலாந்து-பிரான்ஸ் எல்லை வழியாக வனவிலங்குகளைக் கொண்டு செல்வது கடினமான நடைமுறையாகிவிட்டது.
மேலும், அதன் பயணத்தின்போது ஃபிராங்கிக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருக்கலாம் என்ற அபாயம் இருப்பதால், அதைத் திரும்ப அழைத்து வருவதில் கூடுதல் சிக்கல்கள் இருப்பதாக வூல்காக் தெரிவித்துள்ளார்.