
வடகொரியா இன்று காலை நடத்திய ஏவுகணைச் சோதனை தோல்வி அடைந்திருப்பதாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் பாதுகாப்பு அமைச்சகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
வடகொரியாவின் தொடர் அணு ஆயுதச் சோதனைகளால் அந்நாடு மீது ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஆனால் இது குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படாமல் வடகொரிய அதிபர் கிம் ஜோங் யுன் தொடர்ந்து ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருகிறார்.
இதற்கு அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தாக்குதல் நடத்தப்பட்டால் அதனை முறியடிக்கும் விதமாக ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை தென் கொரியா தனது நாட்டு எல்லையில் நிலை நிறுத்தியுள்ளது.
இதற்கிடையே முன்னாள் அதிபர் இரண்டாம் கிம் சங்கின் 105 ஆவது பிறந்தநாள் வடகொரியாவில் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் காட்சிபடுத்தப்பட்டன.
இந்தச் சூழலில் வடகொரியா இன்று காலை ஏவுகணை சோதனை நடத்தியதாகவும், ஆனால் இம்முயற்சி தோல்வி அடைந்திருப்பதாகவும் அமெரிக்காவின் பென்டகன் மற்றும் தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வடகொரியாவின் ராணுவ அணிவகுப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஏவுகணைச் சோதனையால் கொரிய தீபகற்பத்தில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.