பெண்கள் புழங்கும் இடத்தில் ஜன்னலே இருக்கக் கூடாது! தடை விதித்த தாலிபன் அரசு!

By SG Balan  |  First Published Dec 31, 2024, 4:52 PM IST

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீதான தாலிபான்களின் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இப்போது பெண்கள் புழங்கும் இடத்தில் ஜன்னல்களை அகற்ற வேண்டும் அல்லது மூடியே வைத்திருக்க வேண்டும் என்று தலிபான் உத்தரவிட்டுள்ளது.


ஆப்கானிஸ்தான் பெண்கள் மீதான தாலிபன்களின் தொடர்ச்சியான கட்டுப்பாடுகள் தொடர்ந்து உலக அளவில் கடும் கண்டனத்தைப் பெற்று வருகின்றன. இப்போது, அந்நாட்டில் உள்ள குடியிருப்புகளில் பெண்கள் பயன்படுத்தும் இடங்களில் ஜன்னல்களை கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீட்டு முற்றங்கள், சமையலறை, கிணறு போன்ற பகுதிகளில் ஜன்னல் இருக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த இடங்களில்தான் பெண்கள் பெரும்பாலும் வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள் என்பதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார். ஜன்னல்கள் இருப்பது ஆபாசமான செயல்களுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

2021 இல் ஆப்கானிஸ்தான் அரசை தாலிபன்கள் மீண்டும் கைப்பற்றியதில் இருந்து பெண்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. தாலிபன் பயங்கரவாதக் குழுவினர் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பெண்களை பொது வாழ்வின் அனைத்து அம்சங்களிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பெரும்பாலான பணியிடங்களுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெண்கள் பூங்காக்கள் போன்ற பொது இடங்களை அணுகுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது சமீபத்தில் வந்துள்ள ஜன்னல்களுக்கான தடை பெண்களை ஒடுக்கும் பல கட்டுப்பாடுகளில் இன்னொன்றாகச் சேர்ந்திருக்கிறது. இந்த ஜன்னல் தடை உத்தரவின்படி, ஜன்னல்களை தடைசெய்வது மட்டுமல்லாமல், கட்டிடங்களைக் கட்டும்போது நகராட்சி அதிகாரிகள் ஒப்புதலையும் பெற வேண்டும்.

இது  தவிர ஏற்கெனவே ஆப்கன் பெண்களுக்கு கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. எப்போதும் பர்தா அணிந்திருக்க வேண்டும், குடும்ப உறுப்பினர்களாக இல்லாத ஆண்களுடன் பெண்கள் பழகக் கூடாது என்று பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்ற பெண்களுக்கு முன்னால் குர்ஆனை சத்தமாக ஓதத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பல தொழில்களைச் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நர்ஸ் வேலையில் இருக்கும் பெண்கள் மற்றும் அதற்கான பயிற்சியில் உள்ள பெண்கள் அதனை நிறுத்துமாறு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் பிரசவத்தின்போது ஏற்படும் இறப்புகள் அதிகரித்துள்ளன. பெண்களின் கல்விக்கான வாய்ப்புகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 14 லட்சம் சிறுமிகளுக்கு இடைநிலைக் கல்வி மறுக்கப்படுகிறது.

இந்த கட்டுப்பாடுகளுக்கு பல நாடுகளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து உட்பட பல நாடுகள், சர்வதேச மனித உரிமைகள் மரபுகளை மீறியதற்காக தாலிபன் அரசைக் கண்டித்துள்ளன. குறிப்பாக பாலின பாகுபாட்டை அதிகரிக்கும் தாலிபான்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளன. பரவலான கண்டனங்கள் இருந்தபோதிலும், தாலிபன் அரசு மனித உரிமை மீறல் எதுவும் நடக்கவே இல்லை என்று தொடர்ந்து மறுத்து வருகிறது. தங்கள் நடவடிக்கைகள் இஸ்லாமிய சட்டத்தின் விளக்கத்திற்கு ஏற்ப இருப்பதாகவும் தாலிபன்கள் கூறியுள்ளனர்.

தாலிபன் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. அடிப்படை உரிமைககளும் சுதந்திரமும் தொடர்ந்து மறுக்கப்படுவதால் ஒரு தலைமுறையே ஆபத்தில் உள்ளது. சர்வதேச சமூகம் மாற்றத்திற்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. ஆனால் தாலிபன்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள். அனைத்து விமர்சனங்களையும் வெளிநாட்டு சதி என்று கூறிப் புறக்கணிக்கிறார்கள்.

click me!