சீன மக்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் அளிக்கும் செய்தியாக 5 மாதங்களுக்கு பிறகு அங்கு நேற்று யாருக்கும் புதிய பாதிப்புகள் கண்டறியப்படவில்லை. இது மிகப்பெரிய சாதனை என அந்நாட்டு அரசும் மக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
உலகளவில் பெரும் அச்சுறுத்தலை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் 54,23,932 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வைரஸின் தீவிர பாதிப்பால் 3,44,337 மக்கள் பலியாகியுள்ளனர். 27,69,594 மக்கள் தனிமை சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் அவர்களில் 53,262 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. அதனால் இனி வரும் நாட்களில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 22,56,739 மக்கள் கொரோனா வைரஸில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். கொரோனாவில் இருந்து மீண்ட போதும் அவர்களை சுய தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
undefined
கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவில் தான் தோன்றியது. கடந்த டிசம்பரில் இருந்து அங்கு கோர தாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் மார்ச் மாதத்திற்கு பிறகு குறையத் தொடங்கியது. 140 கோடி மக்கள் கொண்ட சீனாவில் கொரோனா வைரஸ் 82,974 பேரை பாதித்து 4,634 உயிர்களை பறித்தது. 78,261 பேர் பூரண நலம் பெற்றுள்ளனர். சீன அரசின் தீவிர நடவடிக்கையில் அங்கு கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து இன்றைய நிலவரப்படி 79 பேர் மட்டுமே சிகிச்சையில் இருக்கின்றனர். அங்கு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே சீன மக்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் அளிக்கும் செய்தியாக 5 மாதங்களுக்கு பிறகு அங்கு நேற்று யாருக்கும் புதிய பாதிப்புகள் கண்டறியப்படவில்லை. இது மிகப்பெரிய சாதனை என அந்நாட்டு அரசும் மக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். எனினும் இன்று புதியதாக 3 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா தொற்று கட்டுபடுத்தப்பட்ட நிலையில் உலகின் பிற நாடுகளில் தற்போது வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ஈரான், இங்கிலாந்து, இந்தியா என உலகின் 210 நாடுகளுக்கு பரவி வரும் வைரஸ் மனித இனத்திற்கு பெரும் நாசத்தை விளைவித்து வருகிறது. உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக வல்லரசு அமெரிக்கா இருக்கிறது. அங்கு 16,66,829 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 98,683 பேர் பலியாகியுள்ளனர். 11,21,219 மக்கள் தொடர் சிகிச்சையில் இருக்கும் நிலையில் 4,46,927 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் குறைவான அளவில் இறப்பு ஏற்பட்டு இருப்பது குறித்து கேள்வி எழுப்பிய அமெரிக்கா, சீனா அரசு சில உண்மையான தகவலை மறைப்பதாக அமெரிக்க குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே முரண் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.