உலகளவில் 53 ஆயிரம் பேர் கவலைக்கிடம்..! கொடூரம் காட்டும் கொரோனா..!

By Manikandan S R SFirst Published May 24, 2020, 8:57 AM IST
Highlights

வைரஸின் தீவிர பாதிப்பால் 3,43,804 மக்கள் பலியாகியுள்ளனர். 27,57,095 மக்கள் தனிமை சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் அவர்களில் 53,562 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. அதனால் இனி வரும் நாட்களில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது.

உலகளவில் பெரும் அச்சுறுத்தலை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த டிசம்பரில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் அங்கு கட்டுக்குள் வந்து நாட்டின் நிலைமை மெல்ல மெல்ல சீராகி வருகிறது. அங்கு 3 மாத காலமாக கோர தாண்டவம் ஆடிய கொரோனா, 82,974 பேரை பாதித்து 4,634 உயிர்களை பறித்தது. 78,261 பேர் பூரண நலம் பெற்றுள்ளனர். சீன அரசின் தீவிர நடவடிக்கையில் அங்கு கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து இன்றைய நிலவரப்படி 79 பேர் மட்டுமே சிகிச்சையில் இருக்கின்றனர். சீனாவில் கொரோனா தொற்று கட்டுபடுத்தப்பட்ட நிலையில் உலகின் பிற நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ஈரான், இங்கிலாந்து, இந்தியா என உலகின் 210 நாடுகளுக்கு பரவி வரும் வைரஸ் மனித இனத்திற்கு பெரும் நாசத்தை விளைவித்து வருகிறது.

இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் 54,01,612 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வைரஸின் தீவிர பாதிப்பால் 3,43,804 மக்கள் பலியாகியுள்ளனர். 27,57,095 மக்கள் தனிமை சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் அவர்களில் 53,562 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. அதனால் இனி வரும் நாட்களில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது. உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக வல்லரசு அமெரிக்கா இருக்கிறது. அங்கு 16,66,828 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 98,683 பேர் பலியாகியுள்ளனர். 11,21,231 மக்கள் தொடர் சிகிச்சையில் இருக்கும் நிலையில் 4,46,914 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் உலக நாடுகளுக்கு அச்சத்தை கொடுத்து வந்தபோதும் அதிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் ஆறுதல் தரக்கூடியதாக இருக்கிறது.

உலகம் முழுவதும் இதுவரை 22,47,151 மக்கள் கொரோனா வைரஸில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். கொரோனாவில் இருந்து மீண்ட போதும் அவர்களை சுய தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் நோய்க்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனிமையில் வைத்து மருத்துவ துறையினர் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து வந்த போதும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோரின் தன்னலமற்ற சேவை காரணமாகவே குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

click me!