கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை, இன்னும் ஒரு ஆண்டு வரை ஆகலாம் என்று ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. இதுவரை 1120 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் 50-ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 25 நாடுகளுக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
இந்த நிலையில் கரோன வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால் யாங் கூறுகையில், “ கரோனா வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்து அதனை விலங்குகளுக்குக் கொடுத்து சோதனை செய்து முடிக்க நான்கு முதல் ஆறு மாதங்கள் ஆகலாம். அதன்பிறகு, மருத்துவப் பரிசோதனைக் கூடங்களில் மனிதர்களுக்கு அதனை செலுத்தி ஆராய்ச்சி செய்ய மேலும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகலாம்.
அப்படியே அது கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனை உற்பத்தி செய்து, உரிமம் பெற்று, விற்பனைக்கு வர கிட்டத்தட்ட 12 மாதங்கள் ஆகும். தற்போதைக்கு, அந்தந்த சுகாதாரத் துறை அறிவுறுத்தும் விஷயங்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.