தீவிரவாதத்தை மதத்தோடு ஒப்பிட்டு பேசுவது தவறு, தீவிரவாதத்துக்கும் மதத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை, சிறுபான்மையினர் மீது இவ்வாறு பழிபோடுவது அவர்களின் கோபத்தைத் தூண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆவேசமாகப் பேசியுள்ளா்.
ஹூஸ்டன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் ட்ரம்ப் பேசுகையில், " மக்களை இஸ்லாமியத் தீவிரவாதம்” என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தார். இதில் தீவிரவாதத்தை இஸ்லாம் மதத்தோடு இணைத்துப் பேசியதற்கு பாகிஸ்தானின் இம்ரான் கான் கட்சியான தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியின் இந்து மதத்தைச் சேர்ந்த எம்.பி. ரமேஷ் குமார் வங்வானி கண்டனம் தெரிவித்திருந்தார்.
இப்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் அதிபர் ட்ரம்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.நா.வில் வெறுப்புணர்வு பேச்சுக்கு எதிரான வட்டமேசை மாநாடு நடந்தது. இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
மதத்துக்கும் தீவிரவாதத்துக்கும் என்ன தொடர்பு, மதத்தோடு தீவிரவாதத்தை இணைத்துப் பேசாதீர்கள். மக்களை வெறுப்பேற்றும் வகையில், அரசியல்ரீதியாக பேசப்பட்டு, அநீதி இழைக்கப்படுகிறது.இப்போது இஸ்லாம் மதத்தை தீவிரவதத்தோடு இணைக்கிறார்கள். இந்த உலகில் ஒரு இஸ்லாம் மதம் மட்டுமே இருக்கிறது. இறைத்தூதர் அருளிய இஸ்லாத்தை மட்டுமே பின்பற்றி வருகிறோம். வேறு எந்த இஸ்லாம் மதமும் இல்லை.
நியூயர்க்கில் இரட்டை கோபுரம் தகர்க்கப்படுவதற்கு முன், 75 சதவீத மனிதவெடிகுண்டு தாக்குதல்களை இலங்கையைச் சேர்ந்த இந்துக்களான விடுதலைப்புலிகள்தான் செய்தார்கள். 2-ம் உலகப்போரில் ஜப்பானியர்கள் தற்கொலைப்படைகளாக மாறினார்கள். ஆதலால், யாருடைய மதத்தையும் பற்றி பேசாதீர்கள்.
மக்களின் நம்பிக்கைகள் அடிப்படையாக வைத்து பாகுபாடும் வன்முறையும் சிறுபான்மை சமூகத்தினர் மீது நடக்கிறது, இது அவர்களை மேலும் கோபத்தைதூண்டும். இஸ்லாம் மதத்தின் மீது மக்கள் பற்றுள்ளவர்கள், இறைத்தூதர் மீது மிகுந்த மரியாதை, பயபக்தி கொண்டவர்கள் என்பதை உலகம் புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்