நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த இரு இளம் பெண்களும், ஜனவரி 16ம் தேதிக்குள் எந்த நாட்டில் உள்ளனரோ அந்த நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஆஜராக வேண்டும் என குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது சத்சங்கத்தில் பேசிய நித்யானந்தா, ’’மனிதர்களின் வாழ்நாள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுவது பொய். தமிழகத்தில் மதுவால் பெரிய சீரழிவு நேர்ந்திருக்கிறது. எனக்கு எதிரான பல்வேறு திராவகத் தாக்குதல்களை எல்லாம்தான் தாண்டி வந்து விட்டேன். நான் போராளி’’எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அவரது முன்னாள் செயலாளர் ஜனார்த்தன சர்மா தனது மகளை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று தொடுத்த வழக்கு விசாரணை நேற்று குஜராத் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் தத்துவப்ரியா, அவரது தங்கை நித்ய நந்திதா இருவரும் காணொலி காட்சி மூலம் ஆஜரானார்கள்.
’’மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் நாட்டில் இருந்து வாக்குமூலமும் தாக்கல் செய்தனர். இந்தியாவுக்கு வர விரும்பவில்லை என்றும் தங்களது தந்தை ஜனார்த்தன சர்மாவால் தங்களுக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தனர். தாங்கள் தற்போது சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் உறுதியளித்தனர். எனினும் வரும் ஜனவரி 16ம் தேதிக்குள் இருவரும் வாக்குமூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், எந்த நாட்டில் இருக்கிறார்களோ அந்த நாட்டின் இந்தியத் துாதரகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த 5ம் தேதி நடந்த விசாரணையின் போது அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் இருந்து வாக்குமூலம் தாக்கல் செய்த சகோதரிகள், தற்போது மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் தீவில் இருந்து வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளனர்.