மந்தை நோய் எதிர்ப்பு சக்தி சமூகத்தில் உருவாக இன்னும் நீண்டகாலம் பிடிக்குமென, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மந்தை நோய் எதிர்ப்பு சக்தி சமூகத்தில் உருவாக இன்னும் நீண்டகாலம் பிடிக்குமென, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். எனவே தடுப்பூசி மூலம் அதை பெறுவதே மிகவும் பாதுகாப்பான வழி எனவும் அவர் எச்சரித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சத்தை கடந்துள்ளது. ஆறு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி கண்டுபிடிக்கபட்டால் மட்டுமே இந்த வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க முடியும் என ஒட்டுமொத்த உலகமும் தடுப்பூசி எதிர் நோக்கி காத்திருக்கிறது. உலக அளவில் அதற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அது கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சமூகத்தில் நோய் அதிகமாக பரவி, அதன்மூலம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் பட்சத்தில் இந்த வைரஸ் பரவலை எளிதில் கட்டுப்படுத்த முடியும் என்ற மற்றொரு கூற்று விஞ்ஞானிகள் மத்தியில் நீண்டகாலமாக இருந்து வருகிறது.
ஆனால் அப்படி ஒரு சமூகத்தில் மந்தை நோய் எதிர்ப்பு சக்கி உருவாக வேண்டுமென்றால், அங்குள்ள மக்கள் தொகையில் 60 முதல் 70 சதவீதம் பேர்வரை நோய் தொற்றுக்கு ஆளாகி, அதன்மூலம் அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருக்க வேண்டும். ஆனால் கொரோனா விவகாரத்தில் அப்படியான ஒரு நிலை இன்னும் ஏற்படவில்லை. ஒட்டு மொத்த நோய் பரவல் விகிதம் என்பது மிகக் குறைவாகவே உள்ளது. எனவே மந்தை நோய் எதிர்ப்பு சக்தி உருவாக தற்போதைக்கு வாய்ப்பில்லை என்றும், அதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெனிவாவில் உலக சுகாதார நிறுவனம் ஏற்பாடு செய்த வீடியோ கான்பரன்சிங் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உலகச் சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சாமிநாதன், தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- கொரோனா வைரஸ் விவகாரத்தில் மக்கள் நோயெதிர்ப்பு சக்தியை பெறுவது, அதாவது மந்தை நோய் எதிர்ப்பு சக்தி சமூகத்தில் உருவாவதற்கு உலகம் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். ஆனால் அதை தடுப்பூசியின் மூலம் பெறுவதே மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.
நோய்த்தொற்று அலையலையாக மக்களை பாதிக்கும் போது மட்டுமே இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி ஒருகட்டத்தில் சமூகத்தில் உருவாகும். ஆனால் தற்போதைய நிலையில் அதற்கான சூழல் இல்லை, உண்மையில் இந்த கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவுவதை தடுக்க, அதன் தொடர்பு சங்கிலிகளை உடைக்க, குறைந்தது 50 முதல் 60 சதவீத மக்கள் மந்தை நோய் சக்தி பெற்றிருக்க வேண்டும், ஆனால் தற்போதைய நிலை அப்படி இல்லை. அதே நேரத்தில் அதை தடுப்பூசியின் மூலம் எளிதாக நாம் செய்துவிட முடியும். ஆனால் தடுப்பூசி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது, எனவே இந்த கொரோனா வைரஸ் உடன் பாதுகாப்பாக வாழ மக்கள் பழகிக்கொள்ளவேண்டும். ஆனாலும் தடுப்பூசிக்கான ஆராய்ச்சிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் ஆராய்ச்சியில் இருந்து வருவதால், அது விரைவில் பலன் அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இயற்கையாகவே சமூகத்தில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி உருவாக அனுமதிக்கும் பட்சத்தில் அது மனித பேரழிவை ஏற்படுத்தக் கூடும் ( இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகள் இந்த முயற்சியில் இறங்கியதாகவும் அதனால் தான் அங்கு உயிரிழப்புகள் பன் மடங்கு அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது) எனவே உயிரிழப்பின்றி, பாதிப்புகள் இன்றி நோயெதிர்ப்பு சக்தியை ஒரு தடுப்பூசியின் மூலம் உருவாக்குவது மிகவும் எளிதான காரியம். ஆனால் அந்த தடுப்பூசியை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பல கட்ட ஆராய்ச்சிகளின் மூலம் செய்யப்படக்கூடிய கடினமாக காரியம் என சௌமியா தெரிவித்துள்ளார்.