3 கோடி பேருக்கு இலவச தடுப்பூசி...!! 3 வயது சிறுமி கொரோனாவால் உயிரிழப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 24, 2020, 10:06 PM IST
Highlights

பிரிட்டனில் சுமார்  30 மில்லியன் மக்களுக்கு இலவச காய்ச்சல் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அந்நாடு அறிவித்துள்ளது.

உலக அளவில் 1 கோடியே 57 லட்சத்து  22 ஆயிரத்து 682 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6 லட்சத்து 37 ஆயிரத்து 710 பேர் உயிரிழந்துள்ளனர். 95 லட்சத்து 95 ஆயிரத்து 463 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் உலக அளவில் உள்ள பல்வேறு நாடுகளில்  கொரோனா ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளது.  

3 கோடி பேருக்கு இலவச தடுப்பூசி

தற்போது இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசி ஆராய்ச்சி  தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,  பிரிட்டனில் சுமார்  30 மில்லியன் மக்களுக்கு இலவச காய்ச்சல் தடுப்பூசி வழங்கப்படும் என்றும், குளிர்காலத்தில் இந்த தொற்று மிக வேகமாகப் பரவும் என்பதால்,  50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் அவர்களுடன் வசிப்பவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளது. 

3 வயது சிறுமி உயிரிழப்பு

பெல்ஜியத்தில் கொரோனா வைரஸ் வேகமெடுக்க தொடங்கியுள்ள நிலையில், 3 வயது சிறுமி வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸால் நாட்டிலேயே உயிரிழந்த  இளவயது பெண் என அந்நாடு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என பெல்ஜியம் அறிவித்துள்ளது.

புடின்-ட்ரம்ப் உரையாடல்

ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் கரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் தொற்று நோய் பரவல் குறித்து தொலைபேசியில் உரையாடி உள்ளனர். இருவரும் இந்த வைரஸ் மிகப்பெரிய சவால் என்று  கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி  பெஸ்கோவ், மாஸ்கோவில்  தீவிரமடைந்து வந்த கொரோனா வைரஸ் அரசு மேற்கொண்ட தீவிர நோய் தடுப்பு நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது மாஸ்கோவில் மட்டும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில் நோய்த்தொற்றின் தாக்கம் அமெரிக்காவிலேயே அதிகம்  எனவும் அவர் கூறியுள்ளார்.  மேலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஐந்து முறை அதிபர் புட்டின் உடன் உரையாடி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

4 வாரங்களுக்கு பள்ளிக்கூடங்களை மூட உத்தரவு

தென்னாப்பிரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் நாடு முழுவதும் அடுத்த நான்கு வாரங்களுக்கு பள்ளிகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஷா இந்த உத்தரவை வழங்கியுள்ளார். சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை  நிபுணர்களுடன் கலந்துரையாடிய பின்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரில் உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மூடப்பட்டுள்ளது உணவகங்களை விரைவில் திறக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலையற்ற இளைஞர்களுக்கு நிதி உதவி

வைரஸ் தொற்றிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் பிரான்ஸ் நாட்டில் ,இன்னமும்  நடைமுறையிலுள்ள முழு அடைப்பு காரணமாக, வேலையற்ற இளைஞர்களுக்காக அந்நாட்டு அரசு ( 6.5 மில்லியன் யூரோக்கள்) சுமார் 56 ஆயிரத்து 50 ஆயிரம் கோடி தொகுப்பைத் நிவாரணமாக அறிவித்துள்ளது. அந்நாட்டின் பிரதமர் இத்திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இருக்குமென்றும், 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு அரசு மானியம் வழங்கும் எனவும் அறிவித்துள்ளார்.

விமான போக்குவரத்து தொடங்க திட்டம்

ஈரான் நாட்டில் வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையிலும்   சர்வதேச விமானங்களை மீண்டும் இயக்க ஈராக் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. அங்குள்ள சிவில் விமானப் போக்குவரத்துத் துறை, “பாக்தாத், பாஸ்ரா மற்றும் நஜாஃப் விமான நிலையங்களுக்கு இந்த அனுமதி அளித்துள்ளது. மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான தேவை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, சர்வதேச விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 2361 புதிய நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன.

ஒரே மாதத்தில் இரட்டிப்பான வைரஸ் தொற்று

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்று ஒரே மாதத்தில் இரட்டிப்பாகி உள்ளது. ஜூன் 23 அன்று 11 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,  ஜூலை 23 வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 15 நாட்களாக ஒவ்வொருநாளும் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 59 ஆயிரத்து 966 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகின்றனர்.

பொதுத் தேர்தல் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருவதால், பொலிவியாவில் இரண்டாவது முறையாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது நிலையில்  வைரஸ் தொற்று தீவிரமாக இருப்பதால் அக்டோபர் மாதத்திற்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் ஜனாதிபதி சால்வடார் ரோமர் நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
 

click me!