உக்ரைனுக்கு காலாவதி ஆன ஆயுதங்களை நேட்டோ நாடுகள் சப்ளை செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்கு காலாவதி ஆன ஆயுதங்களை நேட்டோ நாடுகள் சப்ளை செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 55வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரைன் முழுவதும் வான்வழித் தாக்குதல்களை நடத்திய ரஷ்யா, கீவ் நகரில் மீண்டும் தனது தாக்குதலை தொடங்க திட்டம் தீட்டி வருகிறது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் மரியுபோல் ரஷ்யாவின் கட்டுக்குள் வந்துவிடும் என ஐரோப்பிய அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உக்ரைனுக்கு பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வழங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்களுக்கு ரஷ்ய அதிபர் புடின் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் தெரிவித்துள்ளார். இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யாவின் போர் உலகப் பொருளாதாரத்தில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும்.
கொரோனா தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில், பணவீக்கத்திற்கான மிகப் பெரிய காரணம் ரஷ்யாதான். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் போரால் உலகம் முழுவதும் எரிவாயு விலைகள் மற்றும் உணவு விலைகள் உயர்ந்துள்ளன என்று குற்றம்சாட்டினார். மேலும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், கிழக்கு உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தீவிர தாக்குதலை தொடங்கி உள்ளன. என்ன விலை கொடுத்தேனும், எதிர்தாக்குதல் நடத்தப்போகிறோம் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஐ.நாவுக்கான ரஷ்ய துணை நிரந்தரப் பிரதிநிதி டிமிட்ரி பாலியன்ஸ், உக்ரைனில் நடந்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
அவர் பேசுகையில், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை சப்ளை செய்து வருகின்றன. ஆனால் அவையனைத்தும் காலாவதியான ராணுவ உபகரணங்கள். அவற்றை ரஷ்யப் படைகள் எளிதாக அழித்துவிடும். நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதாக உறுதியளிக்கும் அதேவேளையில், அவற்றை அழிக்கும் சக்தியை ரஷ்யா கொண்டுள்ளது. புத்தம் புதிய தளவாடங்களை சப்ளை செய்வதாக நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம், ரஷ்யப் படைகள் அழித்துவிடும். அசோவ்ஸ்டல் ஆலையை கைப்பற்றிய நிலையில், அங்கு தீவிரவாதிகள் இருப்பதாகவும், அவர்கள் மக்களை பிணைக் கைதியாக வைத்திருப்பதாகவும் கூறுகின்றனர். அந்த ஆலையை கைப்பற்றி ஒருமாதமான நிலையில் இப்போது ஏன் குறிப்பிடுகின்றனர்? என்று தெரிவித்தார்.