ஊரடங்கு நேரத்தில் தூத்துக்குடி போலீஸ் செய்த படுபாதக செயல் ..!! ரத்தம் கொதிக்கும் சீமான்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 23, 2020, 5:35 PM IST
Highlights

நோய்த்தொற்று அண்டாமல் உயிர்காக்க வேண்டிய காவல்துறையினர் எளிய மனிதர்கள் மீது கோரத்தாக்குதல் தொடுத்து அவர்களை உயிரிழக்கச் செய்வது சட்டத்தின் வழியே நிகழ்த்தப்படும் பச்சைப்படுகொலையாகும். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்சை காட்டுமிராண்டித்தனமான தாக்கிக் கொன்ற காவல்துறை அதிகாரிகள் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அலைபேசி கடை வைத்து நடத்தி வந்த ஜெயராசு என்பவரையும், அவரது மகன் பென்னிக்சையும் கடந்த 19ஆம் தேதி ஊரடங்கு நேரத்தைக் கடந்து கடையை மூட தாமதப்படுத்தியது தொடர்பாகக் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று கொடூரமாகத் தாக்கியதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர் எனும் செய்தி பேரதிர்ச்சி தருகிறது. 

மக்களைக் காக்கும் பெரும்பணியில் ஈடுபட வேண்டிய காவல்துறை அதிகாரிகளே எளிய மக்கள் மீது அதிகாரத்தைச் செலுத்தி அவர்களை விசாரணை எனும் பெயரில் அடித்துத் துன்புறுத்தி சாகச்செய்யும் கொடுஞ்செயலை செய்வது சகிக்கவே முடியாத பெருங்கொடுமையாகும். அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். கொரோனா நோய்த்தொற்று அண்டாமல் உயிர்காக்க வேண்டிய காவல்துறையினர் எளிய மனிதர்கள் மீது கோரத்தாக்குதல் தொடுத்து அவர்களை உயிரிழக்கச் செய்வது சட்டத்தின் வழியே நிகழ்த்தப்படும் பச்சைப்படுகொலையாகும். 

இலஞ்சமும், ஊழலும் ஆட்சியதிகாரத்தின் எல்லா அடுக்குகளிலும் புரையோடிப் போயுள்ள நிலையில் அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் இருக்கும் இடைவெளியையும், அதிகாரம் எவ்வளவு அந்நியமாகி மக்களைப் பந்தாடுகிறது என்பதையும் இதன்மூலம் அறிந்துகொள்ளலாம். இவ்விவகாரத்தில், ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்சு உயிரிழக்கக் காரணமான காவல்துறை அதிகாரிகளை நிரந்தரமாகப் பணியைவிட்டு நீக்கி அவர்கள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்ய வேண்டும் எனவும், ஜெயராஜின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
 

click me!